92 கல்லாமை கடிவாளம் இல்லாத குதிரை மேல் ஏறுவது ஒக்கும் - மக்களை வளர்த்தலும் படிப்பித்தலும் 9

கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரலாம்)

புவிநடை கடவுண்மெய்ப் போதம் அன்பறஞ்
செவியினோ தாதொரு சேயைப் பார்விடல்
அவியென வூருமா றறிகி லான்றனைக்
கவியமில் புரவியைத் தோட்டுங் காட்சியே. 9

- மக்களை வளர்த்தலும் படிப்பித்தலும், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”ஒப்புரவு என்ற உலகநடப்பும், கடவுள் உண்டு என்ற அறிதலையும், மெய்யுணர்வு, அன்பு, நன்மை முதலியவற்றையும் காதில் எடுத்துச் சொல்லி உணர்த்தாமல் பிள்ளைகளை உலகத்தில் விட்டுவிடுவது, மனம் போன போக்குள்ள ஊர் உலகம் அறியாத படிப்பறிவில்லாதவன் கடிவாளமில்லாத குதிரையில் ஏறி ஓட்டுவதைப் போன்ற காட்சியே ஆகும்” என்று கல்வியறிவு இல்லாததும், கடிவாளம் இல்லாத குதிரையை ஓட்டுவதும் ஒன்றே என்று இப்பாடலாசிரியர் குறிப்பிடுகிறார்.

புவிநடை - ஒப்புரவறிதல், உலக நடப்பு. போதம் - மெய்யுணர்வு. அவி - மனம் (ஆவி என்பது அவி என்றாயிற்று), கவியம் - கடிவாளம். காட்சி - ஒக்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Feb-23, 9:11 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 32

மேலே