93 பெற்றோர் நடத்தும் தன்மையால் பிள்ளைகள் இன்பதுன்பம் அடைவர் - மக்களை வளர்த்தலும் படிப்பித்தலும் 10
கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
தீயராய் வறியராய்ச் சிலர்வ ருந்தலுந்
தூயராய்ச் சிலர்புவி துதிக்க வாழ்தலுந்
தாயினால் தந்தையால் சமைந்த தன்மையால்
சேயரை நன்னெறிச் செலுத்தன் மேன்மையே. 10
- மக்களை வளர்த்தலும் படிப்பித்தலும், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”சில பிள்ளைகள் ஒழுக்கமற்ற தீயவர்களாக, ஏழைகளாக வருந்துவதும், சில பிள்ளைகள் ஒழுக்கம் உள்ள நல்லவர்களாக உலகத்தோர் வாழ்த்த வாழ்வதும் பெற்ற தாயினாலும் தந்தையினாலும் வளர்க்கப்பட்ட முறையினால் எனப்படுகிறது.
ஆதலால், பெற்றோர்கள் பிள்ளைகளை நல்வழியில் பழக்கப்படுத்துவது மேன்மையளிக்கும்” என்று பிள்ளைகள் நல்லவராவதும், தீயவராவதும் பெற்றோர் வளர்ப்பினால்தான் என்று இப்பாடலாசிரியர் பெற்றோர்க்கு எடுத்துரைக்கிறார்.
சமைந்த – வளர்க்கப்பட்ட