பேருந்து நிலையத்தில் ஒலித்த பாடல்
சமீபத்தில் நான் ஒரு சுற்றுலாப்பயணியாக என் மனைவியுடன் திருநெல்வேலி மாவட்டம் சென்று வந்தேன். அங்கு நடந்த ஒரு சுவையான நிகழ்ச்சியைப்பற்றி இக்கட்டுரையில் நான் பதிவு செய்கிறேன்.
ஒரு நாள் இரவு நானும் என் மனைவியும் அங்கே நடந்துகொண்டிருந்த பொருட்காட்சிக்கு சென்று வந்தோம். புதிய பேருந்து நிலையத்தின் அருகில் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் இருப்பதால், நாங்கள் புதிய பேருந்து நிலையத்தில் இருந்த ‘வசந்த பவன்’ என்ற ஹோட்டலில் இரவு உணவை முடித்துவிட்டு ஹோட்டல் ரூமுக்கு செல்லலாம் என்று ஹோட்டலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது என் காதினில் ஒரு பழைய இனிய பாடல் காற்றில் தவழ்ந்துவந்தது. அதே நேரத்தில் யாரோ ஒருவர் அந்தப்பாடலை அருகில் எங்கோ நடந்துகொண்டிருக்கும் மெல்லிசை நிகழிச்சியில் பாடுவது போன்று எனக்குப்பட்டதால், எனக்கு பழைய பாடல்கள் மீது கொஞ்சம் மோகம் உண்டு என்பதால் என் மனைவியிடம் "இங்கு எங்கோ அருகிலிருந்துதான் பாடல் ஒலிக்கிறது. நாம் சென்று சிறிது நேரம் பாடல்கள் கேட்டுவிட்டு பின்னர் இரவு உணவு சாப்பிடலாம்" என்றேன்.
இருவரும் பாடல் வந்த திசையில் சென்றபோது எங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. புதிய பேருந்து நிலையத்தின் வளாகத்தில் உள்ளிருந்துதான் அந்தப் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. அந்தப் பாடலை கண்பார்வை இல்லாத ஒருவர் காரோக்கி இசையின் பின்னணியில் கையில் மைக் வைத்தபடி பாட அருகில் அவரே அமைத்திருந்த ஒரு ஒலிபெருக்கி பெட்டி மூலம் பாடல் பேருந்து நிலையத்தில் ஓரளவுக்கு தெளிவாகக் கேட்டது. "நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்" என்ற பாடலை அவர் முடித்தவுடன் நான் அவர் அருகில் சென்று "மிகவும் நன்றாக பாடினீர்கள் என்று பாராட்டிவிட்டு கொஞ்சம் பணத்தை அவருக்கு கொடுத்தேன். அதே நேரத்தில் எனக்குத் திடீரென்று ஒரு ஆவல் ஏற்பட்டது. நானும் வீட்டில் காரோக்கி இசை பின்னணியில் பாடல்கள் பாடி வருகிறேன் என்பதால் அவரிடம் "நான் ஓரிரண்டு பாடல்கள் பாடலாமா ?" என்று அவரிடம் கேட்டவுடன் அவர் " நிச்சயமாக பாடுங்கள். இந்தாருங்கள் மைக்" என்று சொல்லி என்னிடம் மைக்கை கொடுத்தார். "என்னப் பாடல் பாட விழைகிறீர்கள்?" என்று கேட்டபோது "நான் பல பழைய பாடல்களைப் பாடுவேன். உங்களிடம் என்னென்ன பாடல்கள் இருக்கிறது" என்று கேட்டபோது "கண்போன போக்கிலே" பாடல் பாடுவீர்களா? என்று கேட்டவுடன் நான் "சரி" என்று சொன்னவுடன் அவர் கையில் வைத்திருந்த சிறு உபகரணத்தில் (சிறிய ஒலிப்பதிவு பெட்டிபோல தோற்றம் உள்ளது ) அந்தப்பாடலை ஓட விட்டார்.
எனக்குப் பாடல் வரிகளும் பிறழாமல் தெரியும் என்பதால் மைக்கை கையில் பிடித்து அந்தப்பாடலை பின்னணி இசையுடன் பாடினேன். பேருந்து நிலையத்தில் இருந்த பலர் என் பாடலை ரசித்தனர் என்பதை நான் கண் கூடாகப் பார்க்கமுடிந்தது. அந்த பாடல் முடிந்தபின் "நிலவே என்னிடம் நெருங்காதே" என்ற பழைய பாடலையும் காரோக்கி பின்னணி இசையுடன் பாடினேன். அங்கே இருந்த ஒரு மூத்த பெண்மணி சைகை மொழியில் நான் மிகவும் நன்றாகப் பாடுவதாக குறிப்பிட்டார். எனவே நான் உற்சாகம் கொண்டு மூன்றாவதாக "நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்" என்ற ஒரு பழைய பாடலையும் பாடினேன். அப்போது இரவு எட்டேகால் மணியிருக்கும். அந்தப்பார்வையாற்ற மனிதர் என்னிடம் " நீங்கள் மிகவும் சிறப்பாக மிகவும் அனுபவித்துப்பாடினீர்கள். மிக்க நன்றி" என்று சொல்லிவிட்டு " ஐயா நான் என் இருப்பிடம் செல்லவேண்டும். நாளை மீண்டும் வந்து பாடுங்கள்" என்று கூறியபோது நான் " நிச்சயமாக" என்றேன்.
இங்கே இரண்டு விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன். ஒன்று நான் பாடிக்கொண்டிருந்தபோது மூன்று அல்லது நான்கு பேர்கள் வந்து பார்வையிழந்தவர் வைத்திருந்த உண்டியலில் பணம் போட்டுச்சென்றனர். என்னால் இன்னொருவருக்கு ஒரு சின்ன வகையில் உதவமுடிந்ததே என்கிற திருப்தி எனக்குக்கிடைத்தது. இன்னொன்று, பார்வை இல்லாதவர் நிச்சயமாகப் பிச்சை எடுக்கவில்லை. மாறாக , அவருக்கு இருந்த பாடும் கலையை அவர் பயன்படுத்தி, மக்களுக்கு காதில் இனிய சங்கீதத்தை படைத்து, மக்கள் அவர்களுக்கு தோன்றும் தொகையை பெற்று தன வாழ்க்கையை நடத்தி வருகிறார். எத்தனை நாட்களுக்கு அவர் இந்தப்பேருந்து நிலையத்தில் பாட முடியும் என்பதும் தெரியாது. ஒரு வேளை காவல் துறையினர் அவரை அங்கிருந்து வெளியேற்றிவிட்டால் அவர் வேறு எங்கு சென்று இதுபோல காரோக்கி பின்னணி இசையில் பாடல்கள் பாடிப் பிழைக்கமுடியும் என்பது எனக்குத்தெரியாது.
நான் வாழ்க்கையில் சில விசேஷங்களுக்கு சென்றபோது எப்போதாவது இதுபோல பாடும் வாய்ப்பு கிடைத்து பாடியிருக்கிறேன். மெல்லிசைக் குழு இசையுடன் ஒன்று இரண்டு பாடல்களை ஐந்து அல்லது ஆறு சந்தர்ப்பங்களில் பாடியிருப்பேன். சில நிகழ்ச்சிகளில் காரோக்கி பின்னணி இசையில் மூன்று நான்கு முறை இரண்டு மூன்று பாடல்கள் பாடியிருப்பேன். நான் அதிக அளவில் பாடியது பக்கவாத்தியம் எதுவும் இல்லாமல்தான். அந்த விதத்தில் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் நான் அன்று காரோக்கி பின்னணி இசையில் மூன்று பாடல்களைப்பாடியது எனக்கு மிகவும் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. என் மனைவி நான் பாடும்போது அவளது அலைபேசியில் எனது பாடல்களை வீடியோ பிடித்தாள். இந்தப்பாடல்களை நான் எப்போதும் சேமித்து வைத்திருப்பேன்.
உடல் ஊனமுற்ற மக்கள் நாட்டிலும் உலகெங்கிலும் ஏராளமாக இருக்கிறார்கள். நல்ல உடலும் ஆரோக்கியமும் இருந்தும் பலர் பிச்சை எடுத்தவண்ணம் இருப்பதைப் பார்க்கும் இந்நாளில், கண்பார்வையற்ற ஒருவர் வெறுமனே பிச்சை எடுக்காமல், தனது கலைத்திறன் மூலம் உழைத்து அவர் வாழ சிறிய அளவில் சம்பாத்தியம் செய்வதைக்காண எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.