திருநெல்வேலி அல்வா
சமீபத்தில் நான் திருநெல்வேலி மாவட்டத்திற்கு சுற்றுலாப்பயணியாகச் சென்றிருந்தேன். நெல்லையப்பர் கோவில் தொடங்கி குற்றாலம் அருவிவரைப் பல இடங்களைக்கண்டு ரசித்தேன். குற்றாலத்தில் மே மாத இறுதியிலிருந்துதான் சீசன் ஆரம்பம். இருப்பினும் நான் சென்ற நாளுக்கு முந்தைய இரண்டு நாட்கள் நல்ல மழைபெய்ததால், அருவிகளில் ஓரளவுக்குத் தண்ணீர் கொட்டியது. நான் இரண்டு அருவிகளில் குளித்து மகிழ்ந்தேன்.
அருவிகளில் தண்ணீர் எப்போதும் விழாது. கேரளாவில் நல்ல மழை பெய்தால்தான் குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டும். ஆனால் குற்றாலத்தில் தண்ணீர் இருந்தாலும் இல்லாவிடினும் திருநெல்வேலியில் ஒன்று மட்டும் எப்போதும் எந்நேரமும் எந்த நாளும் கிடைக்கும். அதுதான் மிகவும் பிரசித்தி பெற்ற திருநெல்வேலி அல்வா.
நான் சென்ற பேருந்து திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் விடிகாலை ஐந்து மணிக்கு செல்லவேண்டியது, அன்று நாலு மணிக்கே புதிய பேருந்து நிலையம் சென்றுவிட்டது. நான் ரூம் போட்டிருந்த லாட்ஜில் மதியம் 12 மணிக்குத்தான் இடம் கிடைக்கும் என்று சொன்னதால், அருகில் உள்ள வேறு சில லாட்ஜிகளில் மதியம் வரைத்தங்க விசாரித்ததில், அன்று முகூர்த்தநாள் என்பதால் எங்கும் ரூம் கிடைக்கவில்லை.
என்ன செய்ய முடியும்? பக்கத்தில் இருந்த புதிய பேருந்து நிலையம் சென்றேன். காலை ஐந்து மணிக்கு பேருந்து நிலையம் நல்ல வெளிச்சமாக இருந்தது. ஏகப்பட்ட தேநீர் மற்றும் தின்பண்டக்கடைகள் பேருந்து நிலையத்தில் இருந்ததன. இந்தப்புது பேருந்து நிலையம் 2021 யில்தான் திறக்கப்பட்டது. நல்ல விஸ்தாரமான பேருந்து நிலையம், நன்கு திட்டம் போட்டு கட்டப்பட்டுள்ளது. ஓரளவுக்கு நல்ல சுகாதாரமாகவே உள்ளது. எவ்வளவு நாளுக்கு இந்த சுத்தமும் சுகாதாரமும் நிலைத்திருக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். திருநெல்வேலியிலிருந்து அருகில் உள்ள பல ஊர்களுக்கும் பேருந்து வசதி உள்ளது. கேரளாவில் உள்ள சில ஊர்களுக்கும் இங்கிருந்து பேருந்து வசதி இருக்கிறது. பயணிகள் அமர நிறைய இடங்களில் இருக்கை வசதிகள் இருக்கிறது. சுத்தமான கழிவறைகளும் ஆங்காங்கே உள்ளது. இரண்டு மூன்று பெரிய ஹோட்டல்கள் உள்ளது. தின்பண்டங்களை கேட்கவே வேண்டாம். அவ்வளவு கடைகள்.
அந்த விடிகாலை நேரத்திலும் அங்கிருந்த ஏராளமான தேநீர் மற்றும் தின்பண்டக்கடைகளில் அல்வா விற்பனை நடந்துகொண்டிருந்தது. எனக்கும் நேரம் கடத்தவேண்டும் என்பதால் சாந்தி ஸ்வீட்ஸ் என்னும் கடையில் அல்வா வாங்கிச் சாப்பிட்டேன். சூடாக இல்லை என்றாலும் சுவை சுமாராக இருந்தது. பொதுவாகவே எனக்கு இனிப்பு என்றால் பிரியம். இரவில் பேருந்தில் சரியான தூக்கம் இல்லை என்பதால் பசியும் இருந்தது. அந்த நேரத்தில் இட்லியும் தோசையும் கிடைக்கவில்லை. அதற்குப் பதில் லட்டும் பாதுஷாவும் வாங்கி சாப்பிட்டேன். அன்றுதான் முதன் முதலாக விடிகாலை ஐந்தேகால் மணிக்கு நான் மூன்றுவகை இனிப்பைத் தின்றது.
அப்போது அங்குள்ள பல தின்பண்டக்கடைகளை கவனித்தபோது கிட்டத்தட்ட அனைத்திலும் சாந்தி ஸ்வீட்ஸ் , சாந்தி அல்வா என்றுதான் பெயர் இருந்தது. நான் அல்வா சாப்பிட்ட கடையில் விசாரித்தபோது கடைக்காரர் " திருநெல்வேலி ரயில் நிலையம் அருகில் இருக்கும் சாந்தி ஸ்வீட்ஸ் கடை அல்வாவுக்கு கொஞ்சம் பெயர் போனது. இதனால் மக்களைக்கவரவேண்டும் என்ற நோக்கத்துடன் பலர் சாந்தி ஸ்வீட்ஸ் என்ற பெயரில் அல்வா வியாபாரம் செய்கிறார்கள்" என்றார். சாந்தி ஸ்வீட்ஸ் சாந்தி அல்வா கடை என்ற பெயர் புதிய பேருந்து நிலையத்தில் மட்டும் அல்ல, திருநெல்வேலி நகரில் உள்ள பல கடைகளிலும் இருக்கிறது. எனக்கு இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.
சரி, ஒரிஜினல் சாந்தி அல்வா எப்படி இருக்கும் என்று சுவைத்துப்பார்க்க ஒரு மாலைப்பொழுது ரயில்நிலையம் அருகே உள்ள சாந்தி ஸ்வீட்ஸ் அல்வா கடைக்குச்சென்றேன். புதிய பேருந்து நிலையத்தில் அதிகம் எண்ணெயில் செய்யப்பட்ட அல்வா கிலோ இருநூறு ரூபாய். கொஞ்சம் நெய்யையும் காட்டி நல்ல பதத்தில் செய்யப்பட்ட அல்வா ரயில்நிலையம் அருகில் இருக்கும் சாந்தி ஸ்வீட்ஸ் கடையில் கிலோ இருநூற்று நாற்பது ரூபாய். மற்ற கடைகளைக்காட்டிலும் இங்கு சுவை நன்றாக இருந்தது, சூடாகவும் கிடைத்தது. அல்வா மற்றும் வேறு இனிப்புகளை வாங்க மக்கள் இந்தக்கடைக்கு வந்தவண்ணம் இருந்தார்கள். அதற்கு அருகில் லட்சுமி என்ற இனிப்பு மற்றும் காரவகைக் கடை உள்ளது. இங்கு கிடைக்கும் கார வகைகளின் சுவைக்காக பலர் இங்குவந்து காரம் மற்றும் இனிப்புகள் வாங்கிச்செல்கின்றனர். ஆனால் நான் லட்சுமி கடையில் ஒன்றும் வாங்கவில்லை. அல்வாவைதின்றே வயிறு நிறைந்துவிட்டது. பர்சில் பணம் குறைந்துவிட்டது.
அதற்கு அடுத்த நாள் தென் இந்தியா முழுவதும் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவில் எதிரில் இருக்கும் 'இருட்டுக்கடை' அல்வா கடைக்கு சென்றேன். இந்த கடையில் விளக்குகள் மிகவும் குறைவு எனவே அந்தக்கடை ஓரளவுக்கு இருட்டில் இருப்பதுபோலதான் தெரியும். அல்வாதான் பொருட்டு என்பதால் இருட்டு பற்றி மக்கள் கவலை படுவதில்லை போலும்.
இந்தக்கடை மாலை ஐந்து முதல் இரவு எட்டு மணிவரைதான் திறந்திருக்கும். இந்தக்கடை 1900 ஆண்டிலிருந்தே இருக்கிறது என்று அவர்கள் அல்வா கட்டி கொடுக்கும் உறைகளிலும் எழுதப்பட்டிருக்கிறது.
இந்த அல்வாவின் சுவையே தனி. நிறைய நெய் ஊற்றி மிகவும் நன்றாக பதப்படுத்தப்பட்ட பஞ்சுபோன்ற அல்வா. விலை கிலோ 340 ரூபாய். அதிக விலை இருப்பினும் நிறைய நெய் ஊற்றி செய்யப்பட்ட இந்த அல்வா கொஞ்சம் வித்தியாசமாக நல்ல சுவையாக இருக்கிறது. திருநெல்வேலியிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற அல்வா கடை இந்த இருட்டுக்கடை தான். எனக்குத்தெரிந்தவரை அல்வாவின் சுவை சர்க்கரையை அதிகமாக சேர்ப்பதாலோ அல்லது நெய்யை அதிகம் சேர்ப்பதாலோ வருவது கிடையாது. உபயோகிக்கும் கோதுமையின் தரம். அல்வா எவ்வளவு நேரம் எந்த ஒரு சூட்டில் இருக்கிறது, அது எவ்வாறு கிளறப்படுகிறது, கிண்டப்படுகிறது போன்ற செயல்களைப்பொறுத்தே அமைகிறது. நான் இருட்டுக்கடை அல்வா நிறைய சாப்பிட்டு மகிழ்ந்தேன். வீட்டிற்கும் வாங்கிச்சென்றேன். வேறு சிலருக்கும் கொடுத்தேன். எல்லோருமே இந்த அல்வா சுவையை ரசித்தார்கள், பாராட்டினார்கள்.
பல நகரங்களில் உள்ள பெரிய மளிகை கடைகளிலும் பல்பொருள் அங்காடிகளிலும் இருட்டுக்கடை அல்வா பாக்கெட்டில் கிடைக்கிறது. ஆனால் இந்த அல்வா திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாதானா அல்லது போலியா என்பது எனக்குத்தெரியாது.
அல்வாவுக்காக திருநெல்வேலி செல்லவேண்டாம். ஆனால் திருநெல்வேலி சென்றால் நிச்சயமாக இருட்டுக்கடை சென்று அல்வா வாங்கி சுவைத்து சாப்பிடவேண்டும். அதே நேரத்தில் மற்ற சில அல்வா கடைகளிலும் கொஞ்சம் அல்வா வாங்கிச் சாப்பிட்டால் விதவிதமான சுவைகளை அறியமுடியும், நிறைய ஹோடேல்களுக்குச்சென்று இட்லி தோசை சாப்பிடுவது போல.
அல்வா சாப்பிடுங்கள், பிறருக்கும் சாப்பிடக்கொடுங்கள் , ஆனால் யாருக்கும் அல்வா கொடுத்துவிடாதீர்கள்.