தாய்ப்பாலின் மகத்துவம்
பிறந்த குழந்தைகளுக்கு க்ரைப் வாட்டர், ஓம வாட்டர், கழுதைப்பால் ஆகியவற்றை கொடுக்கலாமா?
பிறந்த மாத்திரம் முதலே எந்த ஜீவராசியும் உண்ணும் முதல் உணவு தாய்ப்பால். அந்த தாய்ப்பாலின் மகத்துவத்தை பற்றி இந்த பதிவில் அறிவோம். மருத்துவர் அரவிந்தராஜ் அவர்கள் எழுதிய "தாயும் சேயும் நலமுடன் வாழ" என்னும் புத்தகத்தை தழுவி இந்த பதிவை இடுகை இடுகிறேன். படித்துப் பயன் பெறுங்கள். மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
தாய்ப்பால் எப்போது கொடுக்க ஆரம்பிக்கலாம்?
சுகப்பிரவசம் எனில் குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கலாம். சிசேரியன் அறுவை சிகிச்சை என்றால், தாய் நலமான 4 மணி நேரத்தில் தாய்ப்பால் கொடுக்கலாம்.
முதல் ஒருவாரத்தில் தங்க நிறத்தில் சுரக்கும் தாய்ப்பாலை கொடுக்கக்கூடாது என்று கூறுகிறார்களே?
குழந்தை பிறந்த முதல் ஐந்து நாட்களுக்கு தங்க நிறத்தில் சுரக்கும் பாலுக்கு கொலஸ்டரம் (Colostrum) என்று பெயர். இதனை ஆங்கிலத்தில் 'Liquid Gold' என்று கூறுவர். இதில் உள்ள ஆன்டிபாடிகள், நோய் எதிர்ப்பு அணுக்கள் போன்றவை பிற்காலத்தில் குழந்தை நிமோனியா, ஆஸ்துமா போன்ற அவதிக்கு உண்டாகாமல் தடுக்கும். குடல் வளர்ச்சியை மேம்படுத்தும் சத்துகளும் இதில் உள்ளன; மேலும் இதில் விட்டமின்-A அளவு அதிகம் உள்ளது. இது குழந்தையின் கண்பார்வையை மேம்படுத்தும். ஆகவே, இதை நிச்சயம் கொடுக்க வேண்டும்.
எவ்வாறு பால் கொடுக்க வேண்டும்?
குழந்தை பால்வேண்டி மார்பக காம்புகளில் தன் வாயை கொண்டு வரும். இதன் பெயர் Rooting Reflex. அவ்வாறு குழந்தை வாயை கொண்டு வரும் போது, காம்புகளில் மட்டும் வாய் படாமல், அதை சுற்றியுள்ள Areola என்ற இடமும் குழந்தையின் வாயை சுற்றி இருத்தல் வேண்டும்.
குழந்தை பால்குடிக்க ஆரம்பித்ததும், இரண்டு விதமான பால் சுரக்கும்.
1.Fore Milk (முதலில் சுரப்பது)
2.Hind Milk (இறுதியில் சுரப்பது).
முதலாவதாக சுரக்கும் Foremilk-ல் குழந்தையின் தாகத்தை தணிக்கும் வகையில் தண்ணீர் மட்டுமே சுரக்கும். அதில் சத்துகள் மிகக்குறைவு.
இரண்டாவதாக சுரக்கும் HindMilk-ல் தான் குழந்தைக்கு தேவையான கொழுப்பு சத்து, வைட்டமின்கள் ஆகிய யாவும் நிரம்பியிருக்கும். ஆகவே, குழந்தை ஒரு மார்பகத்தில் உள்ள பாலை முழுவதும் குடித்து முடித்த பின்பே அடுத்த மார்பகத்துக்கு குழந்தையை கொண்டு செல்ல வேண்டும்.
ஒரு மார்பகத்தில் உள்ள பாலில் முதலில் சுரக்கும் நீரை மட்டுமே குடித்து விட்டு, அடுத்த மார்பகம் செல்லும் குழந்தை அங்கும் நீர் நிரம்பிய Foremilk-ஐ மட்டும் குடித்து வயிறு நிரம்பி பால் குடிக்காது. மீண்டும் பசியில் குழந்தை அழும். தாய்மார்கள் இப்போது தானே குழந்தை பால் குடித்தது; மீண்டும் ஏன் அழுகிறது என ஐயப்படுவர். இதை சரிசெய்ய ஒரு மார்பகத்தில் நன்கு குடித்த முடித்த பின்பே அடுத்த மார்பகத்தில் உள்ள பாலை புகட்ட வேண்டும்.
க்ரைப் வாட்டர், ஓம வாட்டர், கழுதைப்பால் ஆகியவற்றை கொடுக்கலாமா?
பிறந்த குழந்தைக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் தாய்ப்பாலிலேயே உள்ளது. இந்த ஓம நீர், க்ரைப் வாட்டர் போன்றவே உடலுக்கு தீங்கு விளைவிக்கும். பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் தவிர வேறொன்றும் தரக்கூடாது. தண்ணீர் கூட அவசியமில்லை. ஏதேனும் உடல்உபாதை ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள் மட்டும் அளிக்கலாம்.
எவ்வளவு நாள் பால் கொடுக்க வேண்டும்?
இரண்டு வயது வரை அளிக்க வேண்டும். 6 மாதத்திற்கு பின்பு குழந்தைக்கு எளிதில் ஜீரணம் ஆகும் வகையில் உணவுகள் அளித்து படிப்படியாக 2 வயதில் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தலாம். எக்காரணம் கொண்டும் குடல் உபாதைகளை உண்டாக்கும் மைதா கலந்த பிஸ்கட், இனிப்புகளை அளிக்கக்கூடாது.
Pacifier என்னும் சப்பிகளை கொடுக்கலாமா?
கூடாது. அவை மூலம் குழந்தைக்கு கிருமிதொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும், அவ்வகை Pacifier கொடுப்பதன் மூலம் பல்வரிசை சீராக வளர்ச்சி பெறுவது தடைபெறும்.
பால் கொடுக்கும் பொழுது குழந்தை எந்த கோணத்தில் இருக்க வேண்டும்?
குழந்தையின் தலை, உடல், கால் ஆகிய அனைத்தும் நேர்கோட்டில் இருக்க வேண்டும். குழந்தையின் தலைப்பகுதியில் உள்ள ஜவ்வுகள் மற்றும் சதைகள் வலுப்பெற (Head Holding) 6 மாத காலம் ஆகும். அது வரை தலை கீழே தான் தொங்கும். ஆகவே, குழந்தையின் தலைக்கு தாய்மார்களின் கை கொண்டு முட்டு கொடுத்திட வேண்டும்.
என் குழந்தை நன்றாக பால் குடித்து விட்டது என்பதை எவ்வாறு உறுதிப்படுத்த வேண்டும்?
பசிதீர பால்குடித்த குழந்தை நன்கு உறங்கும். இதை கொண்டே நாம் அதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
எனக்கு ஒழுங்காக பால் சுரக்கவில்லை என்றால் என்ன செய்வது?
பால் சுரக்கவும், அது குழந்தையை சென்றடையவும் Prolactin மற்றும் Oxytocin ஆகிய இரு ஹார்மோன்கள் சரியான அளவில் சுரப்பது அவசியம். எனவே, பால் ஒழுங்காக சுரக்கவில்லை என்றால் மருத்துவரை ஆலோசித்து ஹார்மோன் குறைபாடுகளை நீக்கும் மருந்துகளை பெற்று மீண்டும் பால் நன்கு சுரக்க செய்யலாம்.