பயணம்

பயணம்

அப்பவெல்லாம் வெளியே கிளம்பும்போது வீட்டுக்காரர் கூடவே வருவார், மூணு வருசத்துக்கு முன்னால திடீரென்று ஒரு இராத்திரி “ஹார்ட் அட்டாக்” வந்து போய் சேர்ந்து விட்டார்.
அதுக்கு பின்னால இந்த மூணு வருசமா தனியாக போய் பழகி கொண்டிருக்கிறேன். இருந்தாலும் ஒரு பேச்சு துணையில்லாமல் காரில் உட்கார்ந்து போறது பெரிய இம்சைதான்.
அப்ப, அப்ப டிரைவர் திரும்பி பார்க்க, நானே வழியை சொல்லி சொல்லி போக சொல்றது, தர்மசங்கடமாகத்தான் இருக்குது. அவரு இருந்தா என்னைய பேசவே விடமாட்டாரு, அவரே வழி சொல்லிடுவாரு. இதனாலேயே என்னைய கூப்பிட்டு நிகழ்ச்சி நடத்துபவர்களிடம் அவர்களையே காரை வீட்டுக்கு வர சொல்லி போய் விடுகிறேன். இருந்தாலும், நிகழ்ச்சியை பாதியில் முடித்து வீடு திரும்பலாமுன்னு பார்த்தா, நிகழ்ச்சி முடியும் வரை அவங்களோட காரை எதிர்பார்த்து நிற்க வேண்டியிருக்கிறது.
சமுதாயத்தில் பிரபலமான பெண்ணாக இருந்தாலும், நாளின் முக்கால் பொழுது தனிமையில் இருப்பதாகத்தான் தோன்றுகிறது. மேடையில் நிற்கும் அரைமணி இல்லாவிட்டால் ஒரு மணி நேரம் மட்டும் ஏதோ நமக்காக இத்தனை பேரா..! என்று நினைக்க தோன்றுகிறது, ஆனால் மேடையில் இருந்து இறங்கி விட்டால் மீண்டும் என்னமோ தனிமை சூழ்ந்துதான் கொள்கிறது.
தெரிந்தவர்கள், பழகியவர்கள், இரசிகர்கள், இவர்கள் வழியில் நின்று பேசினாலும் , சரி கிளம்பறேன், அனுமதி கொடுங்க, கேட்டு, அவங்க விலகினாலும் சரி, இல்லை நாமளே நேரமாச்சு போயிடலாமுன்னு நினைப்பு வர்றதும் கூட மனசுக்குள் சட்டென ஒரு வெறுமையை தருகிறது. வீட்டுக்காரர் ஞாபகம் அப்பொழுது நிறைய வருகிறது.
அவர் இருந்த வரைக்கும் நிகழ்ச்சி முடிந்தவுடன் கீழே அந்த கூட்டத்தில் எங்கிருந்தாலும் மேடையின் அருகில் வந்து நின்று விடுவார். முகத்தை பார்த்து இன்னைக்கு ‘சமாய்ச்சுட்டே’, புன்சிரிப்புடன் அவர் சொல்லும்போது புளகாங்கிதமாய் இருக்கும். என்ன பண்ணலாம்? அப்படியே எங்காவது போயிட்டு வீட்டுக்கு போலாமா? இன்னும் நேரமிருக்கு, சரி என்று கடலோரமாய் காரை நிறுத்தி இருவரும் அந்த மணலுக்குள் சிறிது தூரம் நடந்து இருளுக்குள் வெண்மை நிற அலைகளை வேடிக்கை பார்த்தபடியே உட்கார்ந்திருந்த காலங்கள்.
“மேடம்” ஓடி வந்து அறிமுகப்படுத்திக்கொள்ளும் மனித கூட்டங்கள் இல்லாமல், அமைதியாய் கடலை பார்த்தபடி நின்றாலும், அந்த கடலலைகள் அலட்சியமாய் “உன்னை மாதிரி எத்தனை பேரு” அலட்சியமாய் சில நேரம் காலருகில் வந்து கூட கிச்சு கிச்சு மூட்டி செல்லும். இவருக்கு என்னமோ என்னை இந்த கடலலையில் காலை நனைய வைத்து உடலை நெளிய வைப்பதில் அப்படி ஒரு சந்தோசம். இன்னும் ஓடியாடி விளையாடும் வயசா நமக்கு? கேட்டால் எழுபது எல்லாம் ஒரு வயசா? சிரிப்பார்.
பெருமூச்சு வந்தது, உண்மைதான் அவர் இருந்தவரை இதுவெல்லாம் ஒரு வயசா? என்றுதான் கேட்க தோன்றியது, யாருக்கு தெரியும் திடீரென்று “ஹார்ட் அட்டாக்கில்” போய் விடுவார் என்று, அவர் போன அடுத்த நிமிடமே இது “வயதான காலமடி” உன்னை பிடிக்க எத்தனை காலம் காத்திருக்கிறேன் என்று மூப்பு வந்து ஒட்டிக்கொண்டதே”
ஒரு குற்ற உணர்ச்சி சட்டென மனதுக்குள் புகுந்தது, பாவம் அந்த மனுசன், என்னை கல்யாணம் பண்ணி ஐம்பது வருசம் என் கூடயே இருந்து என்னோட பேரு, புகழை பாதுகாத்து பத்திரமா வச்சிருந்தாரே? நான் அவருக்கு என்ன செஞ்சிருக்கேன் இது வரைக்கும்?
முப்பது, நாப்பது வயசுலயாவது ஒரு மருத்துவரை பார்த்து அவர்கூட சிகிச்சை எடுத்து நமக்குன்னு ஒரு வாரிசை உருவாக்கியிருக்கலாம். அவருக்கு இதை பத்தின ஏக்கம் மனசுக்குள்ள இருந்திருக்கும், ஆனா எங்க வெளியே சொன்னா நான் மனசு ஒடிஞ்சிடுவேன்னு இருந்திருக்கலாம். கடவுளே அன்னைக்கு புகழ், வசதி இந்த இரண்டுலயும் பொழுதை ஓட்டி காலத்தை கழிச்சுட்டமே…!
போன் மணி அடிக்கற சத்தம் எடுக்க முடியலை, என் உடம்பு அடிச்சு போட்ட மாதிரி படுத்து கிடக்கறது எனக்கு புரியுது. அப்படியே கிடக்கறேன்.
ஒரு மணி நேரம் ஆயிருக்குமா? என்னை ஆளாளுக்கு தொட்டு உசுப்பறதும், என்னென்னமோ பேசறது கூட உணரமுடியுது, ஆனா எழுந்து என்னை கொஞ்சம் நிம்மதியா விடுங்கன்னு சொல்ல முடியாம கிடக்கறேன்.
ரொம்ப நேரமா அப்படி இருந்திருக்கேன் போலிருக்கு, எப்பவும் தனியா படுத்துட்டு இருக்கற அந்த ரூமுக்குள்ள நிறைய பேரு வந்துட்டாங்க. அப்பா.. “கல கலன்னு” இருக்கறதை பார்க்கறப்ப, சின்ன வயசுல எங்க வீட்டுல அப்பா,அம்மா, அக்கா,தம்பி இவங்களோட இருந்த ஞாபகம் வந்துடுச்சு. அதை நினைச்சு, இதைய உத்து பார்த்துட்டு இருக்கேன்.
அப்பாடி..ஒரு வழியா என்னை வெளியே கூட்டிட்டு போறாங்க, அடேங்கப்பா என்ன வரவேற்பு..! போலீசுக கூட என்னை வரவேற்க நிக்கறாங்க. அப்பவெல்லாம் இப்படித்தான் என்னை கூட்டிட்டு வர்றவங்க நான் வந்தவுடனே மேளதாளத்தோட மாலை போட்டு கூட்டிட்டு போய் மேடையில உக்கார வைக்கறதென்ன, அதுவெல்லாம் இப்ப ஞாபகம் வந்துடுச்சு.
நிறைய பேரு என் பக்கத்துல இருக்காங்க, ஆனா அவங்க என்னைய விட்டுட்டு மத்தவங்க கூட அமைதியா பேசிட்டு வர்றாங்க, ஏன்னு தெரியலை, இந்நேரம் அவரா இருந்தா இரண்டு பேரும் வள வளன்னு பேசிட்டு இருப்போம்.இவங்க என்னடான்னா..?
சரி வெளியிலயாவது வேடிக்கை பார்க்கலாமுன்னு ஜன்னல்ல பார்த்தா “அடேடே இதென்ன இத்தனை பேரு வரிசையா என்னை பார்த்துட்டு நிக்கறாங்க” என்னைத்தானா? நல்லவேளை இந்த வண்டி மெதுவாத்தா போய்க்கிட்டிருக்குது. ஒரு வேளை அவங்க எல்லாம் பார்க்கறதுக்குன்னுதான் மெதுவா போகுதோ?
இருக்கட்டும், டிரைவர் திரும்பினா இன்னும் மெதுவா போகலாமுன்னு சொல்லலாம், வேண்டாம் அவர் ரொம்ப மெதுவாத்தானா போறாரு, அட இந்த பக்கம் கூட என்னை பாக்கறதுக்கு இத்தனை பேரு நிக்கறாங்களே..!
அப்பாடி..! வண்டி நின்னுடுச்சு, ஏன் இவ்வளவு நேரம் நிக்குது? எவ்வளவு நேரமாச்சோ தெரியலை, நிகழ்ச்சி நடத்தறவங்க வந்து என்னை கூப்பிடுவாங்களோ?
பாக்கலாம்.
அட..! இவங்க வித்தியாசமா செய்யறாங்க, போலீசெல்லாம் துப்பாக்கியோட நிக்கறாங்க, வீட்டுல இருந்து கிளம்பறப்போ கூட கொஞ்சம் பேரு நின்னாங்களே, அவங்கதான் என்னை வண்டிக்கு கூட்டிட்டு வந்தாங்க, ஆனா நான் நடந்து வந்தனா? ஞாபகம் வரலையே?
இதென்ன துப்பாக்கி எடுத்து வானத்தை பார்த்து சுடறாங்க? அடடா என்னை தூக்கிட்டுதான் வந்திருக்காங்க, “அப்ப நான் இன்னும் முழிக்கவே இல்லையா?
இதென்ன என் உடம்பை சுத்தி நெருப்பு வருதே, அடடா என் உடம்பு முழுக்க எரியுதே, ஆனா எனக்கு குளு குளுன்னு இருக்குதே..அப்படீன்னா நான் இந்த உடம்புக்குள்ள இல்லியா?
ஓ..! இதென்ன இவ்வளவு சந்தோஷமா பறந்துகிட்டிருக்கேனே?

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (7-Feb-23, 12:42 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : payanam
பார்வை : 150

மேலே