வெற்றியாளர்கள் பல இரகம்

வெற்றியாளர்கள் பல இரகம்

ஒவ்வொரு மனிதர்களும் அவர்களுக்குள் இருக்கும் திறமைகளை. எப்படியாவது உலகில் வெளிப்படுத்திக் கொள்ள முயற்சித்து கொண்டே இருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களுக்குள் இருக்கும் தயக்கம், அல்லது தாழ் உணர்ச்சி இவைகளால் அதை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கிறார்கள்
இடைவிடாத முயற்சி, தோல்விகள், அதனால் ஏற்படும் ஏமாற்றங்கள், அவமானங்கள், இவைகளை பெரிது படுத்தாமல் முயற்சித்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஒரு கட்டத்தில் அவர்களின் திறமைகளை வெளியே கொண்டு வந்து விடுகிறார்கள்.
அதன் பின் அதை தக்க வைக்க போராடிக்கொண்டிருந்தாலும், அவர்களின் ஆரம்பத்தில் செய்த முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகத்தான் அவர்களது முதல் பரிமாணம் காணப்படு கிறது. இவர்களை ஒரு ரகமாக கருதிக்கொண்டால்..!
மற்றொரு ரகமாக இருப்பவர்கள் இதே போல் தங்களது திறமைகளை வெளி உலகிற்கு காட்ட முயற்சித்து பலன் என்னவோ, வேறு பக்கம் திரும்பி இவர்களோடு கூட இருப்பவர்களையோ, அல்லது உறவினர்களையோ வெளி உலகிற்கு காட்டிவிட்டு இவர்கள் கடைசியில் அப்படியே காணாமல் போய்விடுகிறார்கள். இப்படிப் பட்டவர்கள் தான் இன்றைக்கு உலகில் அதிகமாக இருக்கிறார்கள்.
அனேகமாக அவர்களால் உருவாக்கப்பட்ட இன்றைய வெற்றியாளர்களிடம் கேட்டால் அவர்களை பற்றிய நிறைய விவரங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
இப்படி இரண்டு ரகமான மனிதர்களை விட்டு விடுவோம், திறமை உள்ளவர்கள், அதில் வெற்றி பெற்றவர்கள், இல்லையென்றால் வெற்றி பெற்றவர்களுக்கு தன்னையறியாமல் உதவியவர்கள் உதவி கொண்டிருப்பவர்கள்.
மூன்றாவது ரகம் “நாம் திறமை கொண்டவர்கள் அல்ல” என்னும் சிந்தனையில் இருப்பவர்கள், அல்லது இப்படிப்பட்ட திறமை இருக்கிறது என்பதே தெரியாமல் இருப்பவர்கள்,
திடீரென ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டு அதன் மூலம் வெளி உலகில் பெரும் வரவேற்பை பெற்றவர்கள். இவர்களுக்கு பெரிய அளவில் தொலை நோக்கு இல்லாமல் சந்தர்ப்ப வசத்தால் வென்றவர்கள்.
அடுத்த ரகமானவர்கள், வெளி உலகில் வெளிப்படாதவர்கள், என்றாலும் வெற்றி பெற்றவர்களுக்கு தங்களையும் அறியாமல் உதவி செய்ததின் மூலம் அவர்களால் அடையாளம் காண்பிக்கப்படுபவர்கள்.
இப்படிப்பட்டவர்களை பற்றி நாம் நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் அவர்களை பற்றிய விவரங்கள் எதுவும் காணப்படாமலேயே இருக்கும்.
உதாரணங்களை நிறைய காட்டமுடியும், வெற்றி பெற்றவர்களை பத்திரிக்கையிலோ அல்லது ஊடகங்களிலோ பேட்டி காணும்போது அவர்கள் “இந்நாரால்’ உதவி கிடைக்கப்பெற்று’ சாதிக்க முடிந்தது என்று சொல்லியிருக்கிறரகள். அதன் மூலம் அவர்கள் வெளி உலக வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார்கள்.
மற்றொரு ரகமாக , ஒருவர் பேரும் புகழும் அடைய, இவர்கள் தங்களை அறியாமல் உதவி இருப்பார்கள். இதில் வேடிக்கை என்னெவென்றால் ஒரு சிலருக்கு மட்டுமே அந்த வெற்றி பெற்றவர் தன் கையால் உதவியை பெற்றவர் என்று அறிந்திருப்பார். அறிந்து என்ன செய்ய முடியும்? அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் இதை பற்றி அவ்வப்போது பேசி தங்களை ஆற்றிக் கொள்வார்கள்.
“இந்த ஆள் இருக்காரே” அதாம்ப்பா இன்னைக்கு ஓஹோண்ணு இருக்காரில்லையா, அவரு ஒரு காலத்துல எங்கிட்ட கையை கட்டிகிட்டு நின்னவரு. நான்தான் அப்பப்பா ஏதாவது அஞ்சு பத்து கொடுத்து உதவுவேன்’
இதை பிறரிடம் சொல்லி சொல்லி தன் ஆற்றாமையை தீர்த்து கொள்வார். இதை பற்றி எதுவுமே தெரியாமல் இருப்பவர்கள் பாடு நிம்மதியானது. தேவையற்ற மன புழுக்கம் அவர்களுக்கு தோன்றாமல் வழக்கம்போல் இருக்கமுடிகிறது.
வெற்றி என்பது இந்த சமுதாயத்தில் அவர்களது பேர், புகழ், இவைகளை வைத்து எடை போடப்படுகிறது எனும்போது வெளி அரங்கில் பிரபலமாகி கொண்டிருப்பவர்கள், தங்களது வெற்றியை தக்க வைக்க போராடித்தானே ஆக வேண்டியிருக்கிறது.
இந்த உலகில் தங்களின் திறமைகளை நிருபித்து புகழை அடைந்தே தீருவது என்று ஏராளமானவர்கள் முயற்சித்து கொண்டே இருந்தாலும், ஓரிருவர் மட்டுமே அவர்களது நோக்கத்தின் எல்லையை தொட்டு சாதிக்க முடிகிறது, மற்றவர்கள் என்னவானார்கள்? என்னும் கேள்வி தொக்கி நிற்கையில், அவர்களும் மக்கி போய்விடுவதில்லை. முடிந்தவரை ஒரோரு கட்டத்துக்குள் நின்று அந்த வெற்றியுடன் தங்களை திருப்தி படுத்தி கொள்கிறார்கள், இல்லையென்றால் இவர்களை தாண்டி சென்றவர்களை பார்த்து பெருமூச்சு விட்டு கொண்டிருக்கிறார்கள்.
ஆக வெற்றி பெற்றவர்களை நாம் பல ரகங்களாக குறிப்பிடும்போது, அந்த வெற்றியின் அளவு கோலை வைத்து வெற்றி பெற்றவர்கள் எந்த இடத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள் என்பதையும் ரக வாரியாக பிரித்து பார்க்க முடியும்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (9-Feb-23, 11:03 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 65

மேலே