613 தெய்வநிலை அண்டங்கள் தெரிக்கும் கல்லில் - உடன் பிறந்தார் இயல்பு 6

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

சிறுவரைப் போதோர் கல்லைச்
..சேணிடை நிறுவு வோனை
அறுகுண னென்போம் பார்மேல்
..அன்னதன் கீழெப் பாலும்
துறுவிய அண்ட கோளத்
..தொகைகளெண் ணிறந்த வானின்
நிறுவுவோன் தன்னை யின்னே
..நெஞ்சமே யுன்னா தென்னே. 6

- உடன் பிறந்தார் இயல்பு
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

மனமே! நம்மில் ஒருவன் ஒரு கல்லை மண்ணினின்று விண்ணிலெறிகின்றான்-அக்கல் மண்ணின் இழுப்பாற்றலால் உடன் நிலத்தே வந்து விழுகின்றது. எறிந்தவன் மந்திரவலியால், அக்கல்லைச் சிறுபொழுது நடுவே நிற்கச்செய்யின் அவனை, வியத்தகுசெயல் செய்த தெய்வ ஆற்றல் படைத்த விழுமியோனாகக் கூறுவோம்.

அவ்வாறிருக்க, நிலத்துக்கு மேலும் கீழும் மற்றப் பக்கங்களிலும் அளவிலாத அண்டகோளங்களைப் படைத்து ஒன்றோடொன்று மோதாமலும் கீழ் வீழாமலும் நிற்பித்துக் காத்தருளும் முதல்வன் குறைவிலா நிறைவாம் அறுகுணக் கடவுளாவன்.

அத்தகைய செம்பொருளை மறவாவுளத்தோடு இடைவிடாது நினையாமலிருப்பது என்கருதி?

சிறுவரை - சிறுபொழுது. சேண் - தொலைவு.

அறுகுணம் - அன்பு, அருள், அறிவு, ஆற்றல், ஆக்கம், ஆண்மை என்னும் ஆறுபண்புகள்,

துறுவிய - வெளிப்பட்டுத் தோன்றுகின்ற. நிறுவுவோன் - நிற்கச் செய்வோன். உன்னுதல் - நினைத்தல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Feb-23, 7:51 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 49

மேலே