அதுவே திருவுடையார் பண்டம் இருவர் கொளல் - பழமொழி நானூறு 269

இன்னிசை வெண்பா

அருளுடை யாருமற் றல்லா தவரும்
பொருளுடை யாரைப் புகழாதார் இல்லை
பொருபடைக் கண்ணாய்! அதுவே திருவுடையார்
பண்டம் இருவர் கொளல். 269

- பழமொழி நானூறு

பொருளுரை:

போரிடுகின்ற வேல்போன்ற கண்ணை உடையாய்! அருளினை உடைய பெரியோர்களும், சிறியவர்களும் செல்வமுடையாரை புகழ்ந்து பேசாதார் இலர், எல்லோரும் புகழ்வர்;

அங்ஙனம் புகழ்தலே, புண்ணியம் உடையார் விற்கும் பொருளை இருவர் மாறுபட்டுக் கொள்ளுதலை ஒக்கும்.

கருத்து:

பொருள் உடையாரை எல்லோரும் புகழ்வர்.

விளக்கம்:

புண்ணியம் உடையார் பண்டத்தைப் பலரும் போட்டியிட்டுக் கொள்ளுதல் போல, பொருள் உடையாரைப் பலரும் போட்டியிட்டுப் புகழ்வர். அருளுடையார் 'இப்பொருளைப் பெற இவர் என்ன புண்ணியஞ் செய்தாரோ' வென அவர் செய்த நல்வினை நோக்கிப் புகழ்வர்.

அல்லாதார் அவரால் வரும் பயன் நோக்கிப் புகழ்வர். இருவர் என்றது ஒருவர் அல்லர் பலர் என்பதைக் குறிப்பித்தது.

'திருவுடையார் பண்டம் இருவர் கொளல்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Feb-23, 10:11 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

மேலே