ஆய்ந்த அறிவினர் அல்லாதார் புல்லுரைக்குக் காய்ந்தெதிர் சொல்லுபவோ - பழமொழி நானூறு 268

நேரிசை வெண்பா
(’ய்’ இடையின ஆசு, ‘ந்’ எதுகை)

ஆய்ந்த அறிவினர் அல்லாதார் புல்லுரைக்குக்
காய்ந்தெதிர் சொல்லுபவோ கற்றறிந்தார்? - தீந்தேன்
முசுக்குத்தி நக்கும் மலைநாட! தம்மைப்
பசுக்குத்தின் குத்துவார் இல். 268

- பழமொழி நானூறு

பொருளுரை:

இனிய தேன் கூட்டை ஆண்குரங்கு கிழித்து ஒழுகும் தேனை நக்குகின்ற மலைநாடனே! பசு தம்மை முட்டினால் (சினந்து தாமும்) முட்டுவார் இல்லை; ஆதலால், ஆராய்ந்த அறிவினை உடையர் அல்லாதவர்கள் சொல்லும் பொருளற்ற சொற்களுக்கு நூல்களைக் கற்று ஆராய்ந்து அறிந்தவர்கள் சினந்து எதிராகப் பொருளற்ற சொற்களைக் கூறுவரோ? கூறார்.

கருத்து:

ஆராய்ச்சியில்லாதவர்கள் கூறும் அற்பச் சொற்களைப் பொருளாகக் கொண்டு கற்றறிந்தார் சினவார்.

விளக்கம்:

ஆராய்ச்சி இன்மையால் கூறுகின்றார்கள் என்றறிவதல்லது இயல்பாகக் கூறுகின்றார்கள் என்றறிதல் கூடாது.

'பசுக் குத்தின்' என்றமையால் நூல்களைக் கற்றவர்; ஆனால் ஆராய்ச்சியில்லார் என்று கொள்ளல் வேண்டும். பிழை செய்யினும் அவர் பிழையன்று என்று கருதுதல் வேண்டும்.

'பசுக்குத்தின் குத்துவார் இல்' இஃது இச் செய்யுளில் வந்த பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Feb-23, 10:00 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

மேலே