ஏமாந்த போழ்தின் இனியார்போன் றின்னாராய்த் தாமார்ந்த போதே தகர்க்கோடாம் – நாலடியார் 378

நேரிசை வெண்பா
(’மா’ ‘னோ’ மெல்லின எதுகை)

ஏமாந்த போழ்தின் இனியார்போன்(று) இன்னாராய்த்
தாமார்ந்த போதே தகர்க்கோடாம் - மானோக்கின்
தந்நெறிப் பெண்டிர் தடமுலை சேராரே,
செந்நெறிச் சேர்துமென் பார் 378

- பொதுமகளிர், நாலடியார்

பொருளுரை:

காமுகர் தம்பால் மயங்கியிருந்த காலத்தில் புறத்தே அவர்க்கு இனியாரைப் போலிருந்து அகத்தே வஞ்சம் மிக்கவராய்த் தாம் அவர் பொருளையெல்லாம் உண்டுவிட்டவுடனே ஆட்டுக் கடாவின் கொம்புபோல் திருக்குண்டு செல்கின்ற மான் போன்ற மருண்ட பார்வையினையுடைய தம் மனம் போன வழியே யொழுகும்பொருட் பெண்டிரது அகன்ற மார்பினை அருணெறியில் ஒழுகுவேம் என்றிருப்பார் கூடார்.

கருத்து:

விலைமாதரது சேர்க்கையால் அருணெறி யொழுக்கங் கெடும்.

விளக்கம்:

தகர்க்கோடாம் பெண்டிரென்க. அருணெறி யொழுக்கத்தும் பொருணெறிப் போக்குங் கரவு முடையாரது தொடர்பு மாறுபட்டதாகலின் சேராரென்றார்;

"பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்" 1 என்றார்நாயனாரும்,

தந்நெறிப் பெண்டிரென்றது, ஒருவர்க்கு உரிமையாய் அடங்காமை யுணர்த்திற்று.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Feb-23, 9:42 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 9

மேலே