சில்லைக்கண் அன்பினை ஏமாந் தெமதென் றிருந்தார் பெறுபவே பலரால் நகை – நாலடியார் 377

இன்னிசை வெண்பா

ஆமாபோல் நக்கி அவர்கைப் பொருள்கொண்டு
சேமாபோல் குப்புறூஉஞ் சில்லைக்கண் அன்பினை
ஏமாந் தெமதென் றிருந்தார் பெறுபவே
தாமாம் பலரால் நகை! 377

- பொதுமகளிர், நாலடியார்

பொருளுரை:

முதலிற் காட்டாவைப் போல் மெத்தென ஊற்றின்பந் தந்து காமுகரின் கையிலுள்ள பொருளைப் பறித்துக் கொண்டு பின்பு காட்டெருதைப் போற் பிறவிடத்துப் பாய்ந்தோடி விடும் தீயொழுக்கமுடைய பொதுமகளுள்ளத்துப் போலியன்பினை மதிமயங்கி எமக்கு உரியதென்று நம்யிருந்தவர் உலகிற் பலரால் நகைத்தலைப் பெறுவர்.

கருத்து:

பொருட்பெண்டிர் உறவை நம்பியிருந்தவர் பின்பு வறிய நிலையில் அவராற் கைவிடப்பட்டுப் பலரால் நகைத்தலுக்கு இடமாவர்.

விளக்கம்:

ஆமா (காட்டுப் பசு) பிறவுயிர்களை நாவினால் மெத்தெனத் தடவுமென்றும், அதுவே அவ்வுயிர்கட்குக் கடுவாகிய இறுதியை விளைவிக்குமென்றுங் கூறுப.

ஆமா காட்டான் ஆனமை போலச் சேமாவுங் காட்டெருதாயிற்று. குப்புறுதல்:- பாய்ந்து கடத்தல்.

பிறவிடத்தென்றது பொருளுடையார் பிறரிடத்தென்க. தன் விருப்பம்போல் திரிந்து வளம் உண்டு கொழுத்திருத்தலின் அவ்வியல்புடைய பொதுமகளிர்க்குக் காட்டுவிலங்குகள் எடுத்துக் காட்டப்பட்டன.

சில்லை - தூர்த்தை; இழிவென்னும் பொருளான் வந்தது; நம்பிப் பொருளிழந்து கைவிடப்பட்ட நிலைகள், பிறர் நகைத்தற்குக் காரணமாயின.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Feb-23, 9:23 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 5

மேலே