உறவுக்கு உதவிய ரோஜாச் செடி சிறுகதைகள் நூலாசிரியர் கவிபாரதி மேலூர் மு வாசுகி நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி

உறவுக்கு உதவிய ரோஜாச் செடி!
சிறுகதைகள்
நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

*******

மாமதுரைக் கவிஞர் பேரவை நடத்திய கவிதைப் போட்டியில் வென்று கவிபாரதி விருதும் கேடயமும் பரிசு பெற்ற கவிதாயினி மேலூர் மு. வாசுகி அவர்கள் சிறந்த கவிஞர். முதல் நான்கு நூல்கள் கவிதை, கட்டுரை. இது ஐந்தாவது நூல் சிறுகதை தொகுப்பாக வந்துள்ளது. இந்நூலின் மூலம் எழுத்தாளராக தனி முத்திரை பதித்து உள்ளார், பாராட்டுகள். இவரது ‘வெற்றியின் ஏணி’ என்ற நூலிற்கு நான் எழுதிய மதிப்புரையும் நூலில் இடம் பெற்றுள்ளது. மிக்க நன்றி.

இனிய நண்பர் மணிமேகலைப் பிரசுரம் ரவி தமிழ்வாணன் பதிப்புரை வழங்கி உள்ளார். நூலின் தலைப்பிலான சிறுகதை முதல் கதையாக உள்ளது. நான் கவிதைகள் படிக்கும் அளவிற்கு சிறுகதை படிப்பதில் ஆர்வம் செலுத்துவதில்லை. ஆனால் இந்த நூலை ஆர்வமாகப் படித்தேன். நல்ல நடை, தெளிவான நடை, நிகழ்வுகளை நம் கண்முன் காட்சிப்படுத்துவது போன்று, நாம் திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் எழுத்து நடை சிறப்பு.

முதல் சிறுகதை நூல் என்ற சொல்ல முடியாத அளவிற்கு தேர்ந்த முன்னணி எழுத்தாளர் போன்றே சிறப்பாக பாத்திரங்களை வடித்து பெயர் சூட்டி கதைகளை நகர்த்தி செல்கிறார். ஒவ்வொரு கதையிலும் உளவியல் ரீதியான பல தகவல்களை உணரும்படியாக கதைகளை வடித்துள்ளார். எப்படி இவரால் இந்த அளவிற்கு கற்பனை செய்ய முடிகிறது என்று வியக்கும் அளவிற்கு எழுதி உள்ளார். இல்லத்தரசியாக இருந்து கொண்டே வெளிஉலகம் பற்றி இவ்வளவு அறிந்து வைத்துள்ளாரே என அதிசயிக்கும் வகையில் கதைகள் வடித்துள்ளார்.

‘உறவுக்கு உதவிய ரோஜாச் செடி’ என்ற முதல் கதையில் வீடு மாறியவுடன் பழைய வீடு நினைவு வரும். புதிய வீட்டை ஏற்றுக் கொள்ள மனம் பக்குவப்படாது போன்ற நிகழ்வுகளை எடுத்து இயம்பி, புதுவீட்டின் வருகையில் தூக்கமின்றி வாடும் அம்மாவிற்கு தூங்க வழி செய்யும் விதமாக, ரோஜாச்செடி வரவழைத்து அக்கம்பக்கம் உள்ளவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கி நட்பாகி அம்மாவுடன் உரையாடி மகிழ வைத்து நிம்மதியாக தூங்குவதற்கு வழி செய்கிறான். புதிய வீட்டிற்கு சென்றால் தனித்து இருக்காமல் அண்டை வீட்டாருடன் நட்பாக பழகினால் மனம் மகிழும் என்ற செய்தியை கதையின் மூலம் உணர்த்தி உள்ளார்.

இரண்டாவது கதை ‘காகித மேஜை வீடு’. திருமணமாகாத வாலிபர்கள் ஒன்றாகச் சேர்ந்து தங்கி இருக்கும் வீடு. வேலைக்குச் செல்ல வேண்டும். வீட்டில் இருக்கும் நேரம் சமையல் செய்ய வேண்டும். பாத்திரம் கழுவ வேண்டும். தண்ணீர் பிடிக்க வேண்டும். பரபரப்பான வாழ்க்கை. சமையலுக்கு ஒருவரை நியமித்து சமையல் வேலையிலிருந்து விடுபடு-கின்றனர். சமையல் எவ்வளவு கடினமான வேலை என்பதை ஆண்கள் உணரும்வண்ணம் வடித்த கவிதை நன்று. கார்த்திக், கிருஷ்ணன், தருமன், மேகவர்தன், ஜையிர்கான் என்ற ஐந்து வாலிபர்களின் முதல் எழுத்தை சேர்த்து ‘காகித மேஜை’ என்று வீட்டிற்கு பெயர் சூட்டி உள்ளனர் என்று கதையை முடித்து இருப்பது முத்தாய்ப்பு.

மூன்றாவது கதை ‘சொந்தம்’. உறவுகள் பணம் இருந்தால் தான் மதிக்கும். கணவனை இழந்தவள் மகளோடு வாழ்ந்து வருபவள், கணவன் வழி உறவு திருமணத்திற்கு சில வருடங்கள் கழித்து சென்ற போதும் வரவேற்கவில்லை, உபசரிக்கவில்லை, நலம் விசாரிக்கவில்லை, மிகவும் மனம் நொந்து விடுகின்றாள். ஆனால் தான் குடியிருக்கும் வீடு அருகே உள்ள உறவற்ற பாட்டி காட்டும் அன்பு கண்டு நெகிழ்ந்து போகிறாள். உறவை விட நட்பே சிறப்பு என்ற முடிவுக்கு வருகிறாள்.

‘மௌனத்தின் எதிரொலி’ என்ற கதை கணவனிடம், மனைவி என் தங்கை வருகிறாள், பார்த்துவிட்டு போங்கள் என்று சொல்ல, எனக்கு நேரமாச்சு என்று கடிந்து கொண்டு வெளியில் சென்ற கணவன், தங்கை ஊரிலிருந்து வந்தவள், விரைவாகவே விடை பெற்று சென்றாள். இருவருமே சந்திக்காதது போல இருந்துவிட்டு பிறகு பூங்காவில் சந்தித்துக் கொண்டு உள்ளனர். பக்கத்து வீட்டுப் பெண், குழந்தைகளுடன் பூங்கா சென்று அலைபேசியில் எடுத்த படங்களைக் காட்ட, அதில் இருவரும் நெருக்கமாக இருக்கும் படமும் தெரிய, அதிர்ந்து போகிறாள். சண்டை போடாமல், பேசாமல் மௌனம் காக்கிறாள். இதைப் புரிந்து கொண்ட கணவன், மனைவியின் தங்கை அழைக்கும் அலைபேசியை எடுத்து ராங் நம்பர் என்று சொல்லி வைத்து விடுகிறான். கத்தி, சண்டை போடுவதை விட மௌனமே சிறந்தது என்பதை வலியுறுத்தி உள்ளார்.

‘காவலாளி’ என்ற கதை காவலாளியாக வீடு கட்டும் வரை பணிபுரிபவன், உண்மையாக காவலாளியாக இருக்கிறான். அக்கம்பக்கம் உள்ளவர்களிடம் பழகினாலும் யாரும் செங்கல், சிமெண்ட், மண் என ஓசி கேட்டு வந்தால் தருவதில்லை. இந்த நேர்மையை கோபமாக எடுத்துக் கொண்ட நபரே அவர் கட்டும் வீட்டிற்கு காவலாளியாக நேர்மையானவரையே அழைப்பது சிறப்பு. நேர்மை, நியாயம் வாழ்வியல் நெறி கதைகளில் உள்ளன.

ரங்கன், ஸ்டோரில் பருப்பு வாங்கச் செல்கிறான். அங்கே குலுக்கல் பரிசுத் திட்டமும் உள்ளது. இவனுடைய கூப்பனை மற்றவரிடம் கொடுத்து விட்டு இவன் பின்னுக்குச் செல்கிறான். காரணம் வரிசையில் நின்றபோது இவன் அருகில் பிச்சைக்காரியும் அவளது குழந்தைகளும் இவன் கால் அருகே வந்து பிடித்து நின்றன. இதற்கு பயந்து இரக்கப்பட்டு பார்க்க, மனமின்றி, கூப்பனை மாற்றிக் கொண்டு பின்னுக்குச் செல்கிறான். பரிசு இவன் மாற்றிய பழைய கூப்பனுக்கே வருகிறது. இவனுக்கு வரவேண்டியது மற்றவருக்கு போய் விட்டது. இரக்கம் வந்த குழந்தைகள் மீது வெறுப்பு வருகின்றது. பரிசு மனத்தையே மாற்றி விடுகிறது என்பதை உணர்த்துகின்றார்.

இப்படி ஒவ்வொரு கதையையும் விளக்கி எழுத முடியும். ஆனால் நானே கதை முழுவதையும் எழுதி விட்டால் நூல் வாங்கிப் படிக்க மாட்டீர்கள். ‘மற்றவை வெள்ளித்திரையில் காண்க’ என்பதைப் போல ‘உறவுக்கு உதவிய ரோஜாச் செடி’ நூல் வாங்கி படித்து கதைகளை அறிந்து கொள்ளுங்கள். கதைகளில் அறநெறி, மனிதாபிமானம், இரக்கம், நேர்மை, வாழ்வியல் விழுமியங்களை கதாபாத்திரங்களின் உரையாடல்கள் மூலம் உணர்த்தி உள்ளார்.

ஒரே மூச்கில் நூல் முழுவதும் உள்ள சிறுகதைகளை படித்து விடும்படியாக விறுவிறுப்பாகவும், சுவையாகவும் போதனையாகவும் அறிவுறுத்தலாகவும் கதைகள் வடித்துள்ளார் நூலாசிரியர் கவிபாரதி மேலூர் மு. வாசுகி அவர்கள். தான் வாழும் மேலூர் என்ற ஊருக்கு பெருமை சேர்த்துள்ளார். இந்நூலிற்கு பரிசும் விருதும் கிடைக்க வாழ்த்துகள்.

எழுதியவர் : கவிஞர் இரா.இரவி. (6-Feb-23, 7:37 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 50

மேலே