237 சித்திரப் பெண்போல் சூதில் செல்வம் சேராது – சூது 1
கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
வித்தமே மிகுமென வெஃகிச் சூதினில்
அத்தமார் அத்தமும் அழித்தல் தீட்டிய
சித்திர மாதெழி னம்பிச் சேர்ந்ததற்
பத்தினி தனையகல் பான்மை யொக்குமே. 1
- சூது, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”கையிலுள்ள பணமும், பொருளும் பெருகும் என்று ஆசைப்பட்டு சூதாட்டத்தில் மலைபோன்ற பெரும் பொருள் முழுவதையும் இழப்பது, காகிதத்தில் தீட்டப்பட்ட ஓவியத்தில் உள்ள பெண்ணின் அழகை நம்பி, தனக்கு வாய்த்த கற்புள்ள மனைவியை விட்டு அகன்றதற்கு ஒப்பாகும்” என்று சூதின் தீமையை எடுத்துரைக்கிறார் இப்பாடலாசிரியர்.
வித்தம் - சூதாட்டப் பொருள். அத்தம் - மலை.
வெஃகி – ஆசைப்பட்டு, ஆர் – போன்ற,
அத்தம் – பொன், பொருள். பத்தினி - கற்புறு மனைவி.