77 பெற்றோரைப் போற்றாரைத் தண்டிப்பான் ஆண்டவன் - தாய் தந்தையரை வணங்கல் 4
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
வைத்தவர் உளமு வப்ப
..மலர்நிழல் கனியீ யாத
அத்தருத் தன்னை வெட்டி
..அழலிடு மாபோல் ஈன்று
கைத்தலத் தேந்திக் காத்த
..கதற்றாய் பிதாவை யோம்பாப்
பித்தரை அத்தன் கொன்று
..பெருநர கழற்சேர்ப் பானே. 4
- தாய் தந்தையரை வணங்கல், நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”செடியை வைத்து வளர்த்தவர் மனம் மகிழும்படி பூ, நிழல், பழம் நல்காத மரத்தை வெட்டி நெருப்பில் இடுவது போல, பெற்று கைகளில் ஏந்திக் காத்து வளர்த்த அன்பு கொண்ட தாய் தந்தையரை வணங்காத அறிவிலாரை ஆண்டவன் கொன்று இருள் உலகமாகிய நரகத்தில் உள்ள நெருப்பில் தள்ளி வருத்துவான்” என்று தாய் தந்தையரைப் பேணாத பிள்ளைகளை ஆண்டவன் தண்டிப்பான் என்று இப்பாடலாசிரியர் எச்சரிக்கிறார்.
.
தரு - மரம். அழல் - நெருப்பு. நரகம் - இருள் உலகு.