76 கண்காண் தந்தை தாய்க்கு ஒப்பிலை கண்டீர் - தாய் தந்தையரை வணங்கல் 3
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் காய்ச்சீர் வரலாம்)
எப்புவி களும்பு ரக்கும்
..ஈசனைத் துதிக்க வேண்டின்
அப்பனே தாயே யென்போம்
..அவரையே துதிக்க வேண்டின்
ஒப்பனை யுளதோ வேலை
..உலகிற்கட் புலனில் தோன்றுஞ்
செப்பருந் தெய்வம் அன்னார்
..சேவடி போற்றாய் நெஞ்சே. 3
- தாய் தந்தையரை வணங்கல், நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”எல்லா உலகங்களையும் படைத்துக் காக்கும் இறைவனைத் தொழ வேண்டுமானால் அப்பனே, அம்மையே என்று சொல்லுவோம். அவனையே வணங்க வேண்டுமானால் நடிக்கத் தேவையில்லை.
கடல்சூழ்ந்த இவ்வுலகில் நம் கண்களின் பார்வையில் காணப்படும் ஒப்பிலா அரிய தெய்வமாகிய தாய் தந்தையரின் திருவடிகளைப் போற்றவேண்டும் நெஞ்சே” என்று கண்கண்ட தெய்வங்களாகிய தந்தை தாய்க்கு ஒப்பான தெய்வம் வேறில்லை என்கிறார் இப்பாடலாசிரியர்.
புவி - உலகம். புரத்தல் - காத்தல். வேலை - கடல். புலன் - பொறியுணர்வு.