580 அடியரை இகழ்தல் ஆண்டானை இகழ்தலே - தெய்வத்தன்மையும் வாழ்த்தும் 38

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
விளம் மா தேமா அரையடிக்கு
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரும்)

தெய்வநாத் திகமத் தெய்வம்
..யாவினுஞ் சிறந்த தென்ன
உய்வகை பத்தி செய்யா(து)
..ஒழிதல்நல் லொழுக்க மின்மை
பொய்வளர் தெய்வம் போற்றல்
..புனிதரைத் தளியை எள்ளல்
மெய்வளர் வேத நிந்தை
..விமலதூ டணங்க ளாமால். 38

- தெய்வத்தன்மையும் வாழ்த்தும், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

கடவுள் இல்லையென்னும் பாழ்ங்கொள்கை, உலகுடல் உயிரினும் சிறந்து நிலவும் கடவுளைக் காதல் கொண்டு கைதொழுது பத்திசெய்து வாழ்வதே உய்யும்வகை எனக் கொள்ளாதிருத்தல்,

நல்லொழுக்கம் இல்லாதிருத்தல், இறந்துபட்ட ஆவிகளாகிய சிறு தெய்வத்தை வழிபடுதல்,

பிறர்க்கென வாழும் பெற்றி வாய்ந்த தூயோரைப் பெம்மான் வீற்றிருந்தருளும் திருக்கோவிலை இகழ்தல்,

மறைநூலை முறையுற உணராமலே குறைகூறுதல் முதலியவை தெய்வ இகழ்ச்சியாகும்.

நாத்திகம் - மெய்ப்பொருள் இல்லெனும் பாழ்ங்கோள். பொய் வளர் தெய்வம் - சிறுதெய்வம்.
புனிதர் - தூயோர்; மெய்யடியார். தளி - திருக்கோவில். வேதம் - மறை. நிந்தை - இகழ்வு.
விமலன் - அழுக்கற்றவன்; கடவுள். தூடணம் - இகழ்வு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Feb-23, 7:56 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

சிறந்த கட்டுரைகள்

மேலே