579 பரமனை வணங்குநாள் பயனுடைத் திருநாள் - தெய்வத்தன்மையும் வாழ்த்தும் 37

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரும்)

எவ்வஞர் உறினும் ஞாங்கர்
..இறையுள னென்னத் தேறின்
அவ்வஞர் வருத்துங் கொல்லோ
..ஐயனை யுன்னிப் போற்றிச்
செவ்வழி நிற்கு நாளே
..சீவனுய் கின்ற நாளாம்
ஒவ்வரு மிறைவற் போற்றா(து)
..ஒழியும்வாழ் நாள்பாழ் நாளே. 37

- தெய்வத்தன்மையும் வாழ்த்தும், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

எவ்வகைத் துன்பம் நேர்ந்தாலும், நேர்ந்த அவ்விடத்தே நம்மைக் கைவிடாது காத்தருளக் கடவுள் காத்திருக்கின்றான் என்னும் உண்மையைத் தெளிந்தால், அப்பொழுதே அத்துன்பம் நம்மை வருத்தாது அகலும்.

கடவுளை அகங்குழைந்துருகி அன்பான் நினைந்து பரவுதல் செய்யும் நாளே நாம் உய்யும் நாளாகும். தனக்குவமை இல்லாதான் தாள் வணங்காதவர் வாழ்நாள் பாழ்நாளாகும்.

அஞர் - துன்பம். ஞாங்கர் - இடம். தேறின் - தெளிந்தால். ஐயன் - கடவுள். உன்னி - நினைத்து.
போற்றி - பரவி. சீவன் - உயிர். பாழ்நாள் - பயனின்றிக் கழியும் வீழ்நாள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Feb-23, 7:48 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 9

சிறந்த கட்டுரைகள்

மேலே