கட்டளைக் கலித்துறை

கலித்துறையின் ஒரு வகை கட்டளைக் கலித்துறை. கட்டளை= எழுத்தின் அளவு. இக்கலித்துறையில் நான்கடிகளிலும் எழுத்தெண்ணிக்கை ஒரே மாதிரியாக வருவதால் இப்பெயர் பெற்றது.

காரிகை நூற்பாக்கள் அனைத்தும் கட்டளைக் கலித்துறை யாப்பில் அமைந்தவை. காரிகைக்குப் பின் வந்த இலக்கணங்களில் கட்டளைக்கலித் துறையின் இலக்கணம் சொல்லப்படுகிறது. கோவை எனும் சிற்றிலக்கியம் முழுமையும் கட்டளைக் கலித்துறையால் அமைந்தது.

கட்டளைக் கலித்துறையால் அமையும் நூற்பாவுக்கே காரிகை எனும் பெயர் உண்டு. இதன் இலக்கணத்தைக் காண்போம்.

(1) நெடிலடி நான்காய் வரும்.

(2) ஒவ்வோரடியிலும் முதல் நான்கு சீர்கள் பெரும்பாலும் ஈரசைச் சீர்களாக வரும்; சிறுபான்மை தேமாங்காய், புளிமாங்காய்ச் சீர்களும் வரலாம். ஐந்தாம் சீர் விளங்காய்ச் சீராக வரும்.

(3) ஒவ்வோரடியிலும் முதல் நான்கு சீர்களும் வெண்டளை அமைந்து வரும். அதாவது அடி முழுதும் வெண்டளை அமைந்து வரும். ஆனால் அடியின் இறுதிச் சீருக்கும் அடுத்த அடியின் முதற் சீருக்கும் இடையே வெண்டளை வரவேண்டியதில்லை.

(4) ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடியும்.

(5) நேரசையில் தொடங்கும் அடி ஒற்று நீங்கப் பதினாறு எழுத்துகளையும், நிரையசையில் தொடங்கும் அடி ஒற்று நீங்கப் பதினேழு எழுத்துகளையும் பெற்றிருக்கும். (ஒற்று - மெய்யெழுத்து)

(எழுத்தெண்ணி எழுத வேண்டியதில்லை. வெண்டளையும் ஈற்றில் விளங்காய்ச் சீரும் அமைந்தால் இந்த எழுத்து எண்ணிக்கை தானே அமையும்)

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Feb-23, 6:26 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 124

மேலே