398 பெருந்துன்புற்றும் பெரியோர் பிறர் துன்பம் நீக்குவார் – கைம்மாறு கருதா உதவி 16

கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்.
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு.
(முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

நூனு ழைந்த நுவலருஞ் சீலர்தம்
பானு ழைந்த படர்மதி யார்பிறர்
கானு ழைந்த கடுவுந்தங் கண்ணின்வை
வேனு ழைந்தென முன்னி மிறைப்பரே. 16

- கைம்மாறு கருதா உதவி, நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”நுண்ணிய நூலறிவு உடைய, சொல்வதற்கு அரிய ஒழுக்கமுடைய சான்றோர் தங்களுக்கு ஏற்பட்ட துன்பத்தைப் பொருட்படுத்த மாட்டார்.

ஆனால், பிறருடைய காலில் தைத்த முள் தம் கண்ணில் கூரிய வேல் நுழைந்தது போலக் கருதி மிகவும் வருந்தி அத்துன்பத்தை நீக்குவர்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

படர்- துன்பம். மதியார் - பொருட்படுத்தார்.
கடு - முள். முன்னி - கருதி. மிறைப்பர் - வருந்துவர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Feb-23, 4:04 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே