397 உளமுவந்து ஈபவை உயிர்க்குறுதி யாகும் - கைம்மாறு கருதா உதவி 15
கலித்துறை
(மா காய் விளம் விளம் காய்)
துய்க்கும் பொருள்களுமே நமதல துய்த்தலில் லாதுசும்மா
வைக்கும் பொருள்களுமே நமதல மாண்டபின் கூடவரா
எய்க்கும் வறுமையினார்க் கனுதினம் ஈயும் பொருள்நமது
கைக்குள் உறுபொருளாம் இதனினைக் கண்டுண ராய்மனமே. 15
- கைம்மாறு கருதா உதவி, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”நெஞ்சே! நாம் அனுபவிக்கும் பொருள்களும், அனுபவிக்காமல் சேர்த்து வைத்திருக்கும் பொருள்களும் நம் உயிர்க்குப் பயன் தரக்கூடிய பொருளன்று. நாம் இறந்தபின் அவைகள் நம்முடன் வருவதில்லை.
துன்பம் தரும் வறுமையினால் வாடும் எளியவர்கட்கு மனமுவந்து தினமும் அளிக்கும் பொருளே நமது கைக்குள் உற்ற பொருள் போன்றது என்பதை உணர வேண்டும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.