503 இருதிங்களில் மகப்பெறுதல் இயற்றிய தவப்பயன் – கணிகையரியல்பு 30

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)

எனையன்றி மற்றோரைச் சேர்ந்தறியேன் என்றகன்னி
..யிருதிங் கட்குள்
தனையனையீன் றாள்புதுமை என்னென்றேன் நினையும்மைத்
..தழுவி யிச்சேய்
சினையாயெண் மதியிலிறந் தேனிகத்தும் உனைப்புணரச்
..செய்த நோன்பான்
முனையல்கு மிருமாத நிறைந்துடனிம் மகவீன்றேன்
..முதல்வ என்றாள். 30

– கணிகையரியல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

என்னையன்றி வேறொருவரையும் சேர்ந்தறியேனென்ற கன்னிப் பொதுமகள் இரண்டு திங்களுக்குள் ஆண் மகவு பெற்றாள். இவ்வாறு இரண்டு திங்களுக்குள் பிள்ளை பெறுதல் புதுமையிலும் புதுமை. இதன் காரணம் என்ன? என்றேன்.

`முற்பிறப்பில் உம்மைத் தழுவி இச் சேயைக் கருவுற்று எட்டு மாதத்தில் இறந்தேன். இறக்கும்போது உம்மையே மறுப்பிறப்பிலும் இந்தக் கருவுற்ற நிலையோடு கூடவேண்டும் என்று கடுந்தவம் புரிந்தேன். அத் தவப்பயனால் முன்னைக் குறைவுற்ற இரண்டு திங்களும் நிறைவுற்றதும் மகப்பெற்றேன் தலைவ என்றாள்.

தனையன் - மகன். புதுமை - வியப்பு. சேய் - பிள்ளை. மதி - மாதம். உம்மை - முற்பிறப்பு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Feb-23, 3:35 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 11

சிறந்த கட்டுரைகள்

மேலே