502 அத்தை சொக்குத்தூள் அடிக்குப் பொன் தூளாம் – கணிகையரியல்பு 29

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)

இனியாளை நோக்கியத்தை சக்கிரிக்குச் சொக்குத்தூள்
..இடுவா யென்ற
தொனிகேட்டுச் சினந்துநானும் குயவனோ,யா னெனைமயக்கத்
..தூளோ வென்றேன்
தனியரசாஞ் சக்கிரிநீ யாகையினின் னடிமலர்தோய்
..தான மெல்லாம்
நனியேசொக் கெனுங்கனகப் பொடியிறையென் றேன்முனிதல்
..நன்றோ வென்றாள். 29

– கணிகையரியல்பு, நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

உயிரினும் இனியாளாகிய பொதுமகளைப் பார்த்துத் தாய்க்கிழவியாம் அத்தை, `அறிவிலாக் குயவனை ஒத்த செல்வனுக்கு நம்பால் பிணிக்கும் மயக்கத்தூள் இடுக என்றாள்.

அக்குரலொலி கேட்டு யான் சினங்கொண்டு, `நான் குயவனோ? என்னை மயக்க மருந்துப் பொடியோ? என்று கூறினேன்.

அவள், `உலகைத் தனியரசாளும் ஆணைச் சக்கரத்தையுடைய வேந்தர் நீராகையால், உம்முடைய அடிமலர் படும் இடங்களெல்லாம் மிகுதியும் பொன் தூள் பரப்புக என்று கூறினேன். இதற்கு நீர் சீற்றம் கொள்ளுதல் நன்றோ என்றாள்.

சக்கிரி - மண் அறுக்கும் சக்கரத்தைக் கருவியாகக்கொண்டுள்ள குயவன். சொக்குத் தூள் - மயக்கப்பொடி.

சக்கிரி - ஆணைச்சக்கரத்தைச் செலுத்தும் ஒப்பில்லாத மன்னர் மன்னனாம் வேந்தன். சொக்கு - பொன்.

முனிவு -சினம்; சீற்றம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Feb-23, 3:31 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

சிறந்த கட்டுரைகள்

மேலே