140 நாற்குணமே நல்லணியாம் நாதன் மகிழ்வே நகையாம் - கணவன் மனைவியர் இயல்பு 32
தரவு கொச்சகக் கலிப்பா
பொன்னகையி லாயெனச்சொல் பொற்றொடியே பரத்தையர்க்கே
அந்நகைக ளுரியவையா மச்சநாணும் மடம்பயிர்ப்பும்
இன்னகையாங் கற்பினர்க்கு மேதினியுள் நீசொலுமப்
புன்னகையு நண்பரினோர் புன்னகைக்கு நிகராமோ. 32
- கணவன் மனைவியர் இயல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்கள் என்னிடம் இல்லையென்று சொல்லும் தோழியே! பொன் நகைகள் விலைமகளிர்க்கே உரியன.
அன்பு காரணமாகத் தோன்றும் நடுக்கமும், மனஒடுக்கமும், அடக்கமும், கூச்சமும் ஆகிய நான்குமே கற்புடைய குலமகளிராகிய எமக்கு இனிய நகைகளாகும்.
உலகத்துள் நீ சொல்லும் அந்த இழிவான பொன் நகைகள் என் கணவர் கனிந்து காட்டும் புன்முறுவலுக்கு ஒப்பாகுமா?” என்று தலைவி தோழியிடம் நாற்குணமே பெண்களுக்கு நல்ல அணிகலன்களாகும் என்று உரைக்கிறார்.
புன்நகை - இழிந்த அணிகலன். நண்பர் – கணவர், காதலர், புன்னகை - குறுஞ்சிரிப்பு.
அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு - நடுக்கம், மனஒடுக்கம், அடக்கம், கூச்சம்