238 கல்லாது சூதினிற் காலம் போக்கல் இழிவே - சூது 2
கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில் ஒற்றோ தான் வரும். நெடில், நெடில் ஒற்று வராது)
வையமேன் மானிடர் வாழும் நாட்சில
ஐயமில் கேள்விதான் அளவில் ஆருயிர்
உய்யநல் வினைகளை உஞற்றி டாதுநாள்
பொய்யமர் சூதினிற் போக்கல் புன்மையே. 2
- சூது, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”இவ்வுலகத்தில் மக்கள் வாழ்வது சில நாட்களே ஆகும். சந்தேகத்திற்கு இடமின்றி கேட்டுணர்ந்து அறிய வேண்டிய நூல்கள் அளவில்லாதவை.
அருமையான நம் உயிர் நல்ல முறையில் வாழ ஒவ்வொரு நாளும் நற்செயல்களைச் செய்யாமல் நாள் முழுவதும் பொய்யான சூது விளையாட்டில் காலம் போக்குவது இழிவாகும்” என்றும்,
கல்வி கேள்விகளில் ஈடுபடுவது ஒருவர்க்கு சிறப்பு அளிக்கும் என்றும் கூறுகிறார் இப்பாடலாசிரியர்.
வையம் - உலகம். கேள்வி - நூல்.
உஞற்றல் - செய்தல். புன்மை - இழிவு.