295 மெலியரைச் சினப்போர் மீளா நரகில் ஆழ்வர் – சினம் 1
எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரலாம்)
வலியரைச் சினப்போர் வரையினின் மோது
= மட்கல மெனவுடைந் தழிவார்
பொலிவுறத் தமையொப் பவர்களைச் சினப்போர்
= புலியிரண் டொன்றையொன் றடித்து
மெலிவொடு இரண்டுங் கெடுவபோற் கெடுவார்
= மெலியரை வெகுளுவோர் வேங்கை
எலியினை யெதிர்த்த தன்மைபோ லிழிவுற்(று)
= எரிநர கிடையமிழ்ந் துவரே. 1
- சினம், நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”தம்மினும் வலியவரிடம் சினம் கொள்வோர் மலையில் மோதி உடையும் மண் பாண்டம் போல உடைந்து அழிவார்.
அறிவுக்கூர்மையில் தன்னை ஒத்தவரிடம் கோபம் கொண்டால் இரண்டு புலி ஒன்றோடொன்று சண்டையிட்டு பலமிழந்து இரண்டும் கெடுவபோல் கெடுவர்.
தாழ்ந்தாரிடம் கோபம் கொண்டால் வேங்கைப் புலி, எலியை எதிர்த்துப் பழி பெறுவதுபோல் இகழ்வெய்தி நெருப்பு எரியும் நரகில் அழுந்துவர்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
வலியர் – உடல் பலம் உடையவர். பொலிவு– அறிவுக்கூர்மை, மெலியர் - தாழ்ந்தோர்.