296 மெலியரிடம் சினம் வேண்டுமென்றே கொள்வர் – சினம் 2
கலித்துறை
(மா விளம் விளம் விளம் மா)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச் சீர் வரலாம்)
எம்மை யுந்தெரி யாமலிச் சினம்வந்த தென்பீர்
உம்மை நோய்செயும் வலியரை வெகுண்டிடா தொளிப்பீர்
இம்மை வாழ்விலா எளியர்பாற் றினமுமக் கெய்தும்
வெம்மை நீரறிந் தோவறி யாமலோ விளம்பீர். 2
- சினம், நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”எனக்குத் தெரியாமல் இந்தக் கோபம் வந்ததென்று நீர் சொல்வீர். உமக்குத் துன்பம் செய்யும் வலியவர் மேல் கோபம் வந்தாலும் கோபம் கொள்ளாது மறைத்து விடுவீர்.
இப்பிறவி வாழ்க்கையில் வளமில்லாத எளியவரிடம் தினமும் உமக்கு ஏற்படும் கோபம் உமக்குத் தெரிந்தா அல்லது தெரியாமலா என்று சொல்வீர்” என்று இப்பாடலாசிரியர் கேட்கிறார்.