399 பிறர்துயர் போக்கிப் பேணுக புகழுடல் - கைம்மாறு கருதா உதவி 17

கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)

முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
நிரையில் தொடங்கினால் 12. எழுத்தெண்ணிக்கை தானே வரும்!
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்.
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு.
(முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்;
மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

புறம்வ ருந்திடப் பூத வுடம்பினை
மறவு டம்பை வளர்ப்ப ரறிவிலார்
உறவி டும்பை உறாவண்ண மீந்துநல்
அறவு டம்பை வளர்ப்ப ரறிஞரே. 17

- கைம்மாறு கருதா உதவி, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”அறிவில்லாதவர்கள், அருகில் உள்ளவர்கள் பசி நோய் முதலியவற்றால் வருந்தக் கண்டும் அழியக்கூடிய பாவ உடம்பை வளர்ப்பார்கள்.

ஆனால், அறிவுடையவர்கள், பிறர் மிகுதியாகத் துன்பம் அடையாதபடி அவர்களுக்குக் கொடுத்து தம் புகழுடம்பை வளர்ப்பார்கள்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

புறம் - அருகில். பூதம் - பருமை. மறம் - பாவம்.
உற - மிகுதியாக. அறம் - புண்ணியம்; புகழ்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Feb-23, 3:39 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 11

மேலே