400 தேடி நல் உதவி செய்வோர் பெரியோர் - கைம்மாறு கருதா உதவி 18
கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
நிரையில் தொடங்கினால் 12. எழுத்தெண்ணிக்கை தானே வரும்!
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்; விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு. (முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)
ஓடி யெங்கு முலரும்பைங் கூழ்களை
நாடி மைமுகி னன்மழை பெய்தல்போல்
வாடி நையும் வறிஞ ரிருக்கையைத்
தேடி மேலவர் செய்வ ருதவியே. 18
- கைம்மாறு கருதா உதவி, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”விரைந்து சென்று எவ்விடத்தும் மழையின்றி வாடும் பசுமையான நெற்பயிர்களைத் தேடி கரிய மேகம் மழையைப் பொழிகிறது.
அது போல, அறிவுடையோர் வாடி வருந்தும் ஏழைகள் தங்கும் இடத்தைத் தேடிச்சென்று வேண்டும் உதவிகளைச் செய்வர்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
பைங்கூழ் - நெற்பயிர். மை - கருமை, முகில் - மேகம். நையும் - வருந்தும், மேலவர் - அறிவுடையோர்.