278 ஈயாச் செல்வன் சாவையே எவரும் விரும்புவர் – கடும்பற்று 7
கலிவிருத்தம்
விளம் விளம் மா கூவிளம்
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் வரலாம்)
ஈகையில் லாதுபொன் ஈட்டு வோன்கொண்ட
தோகையு மைந்தருந் தொலைகி லானென
ஓகையா யருவிட முணவி லிட்டவன்
சாகையே கருதிமா தவஞ்செய் வார்களே. 7
– கடும்பற்று, நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”சேர்த்த பொருளை நற்காரியங்களுக்குப் பயன் படுத்தாமல் பொன்னை மட்டும் தேடுவோனின் மனைவியும் மக்களும் அவன் செத்துத் தொலைய வில்லையே என்று அவன் உண்ணும் சோற்றினில் விருப்பமுடன் நஞ்சு கலந்து கொடுத்து அவன் சாவை எதிர்பார்த்து பெருந்தவமும் செய்வார்கள்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
தோகை - மயில் போன்ற மனைவி.
ஓகை – உவகை, மகிழ்ச்சி, விருப்பம்,
தொலைவு - சாவு. சாகை - சாதல்.