279 அனுபவமில்லாச் செல்வம் நச்சுமரத்தைக் காப்பது போலவாம் – கடும்பற்று 8
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
அனுபவ மொன்றே பொன்னால்
..ஆயநற் பயனஃ தின்றேற்
புனலிலாத் தடத்தைப் பெய்யாப்
..புயலினைப் பொருவு மப்பொன்
தினமுமே நுகர்த லின்றித்
..தீனர்க்கும் வழங்க லின்றித்
தனமதைக் காத்தல் நச்சுத்
..தருவினைக் காத்தல் போலாம். 8
– கடும்பற்று, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”பிறர்க்குத் தான தர்மம் செய்தும், பகுத்துண்டும் அனுபவிப்பதே செல்வத்தின் பயன் ஆகும்.
அவ்வாறு இல்லாமல், நீரில்லாத குளத்தையும் பெய்யாத மழையையும் போல இவர்கள் ஒவ்வொரு நாளும் அனுபவிக்காமலும் வறியவர்க்கு வழங்காமலும் தங்கள் பொருளைக் காத்திருப்பது நஞ்சுள்ள மரத்தைக் காத்து வளர்ப்பது போலாகும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
அனுபவம் - நுகர்வு, அனுபவித்தல், புயல் – மழை, தீனர் – வறியவர்.