நயன்தாரா மினரல் வாட்டர்

குமரப்பன் குள்ளப்பன் என்று இரண்டு நெருங்கிய நண்பர்கள் இருந்தார்கள். குமரப்பன் உயரம் ஆறடி; குள்ளப்பன் உயரம் நாலடி;. இருவருமே பள்ளியில் ஒரே வகுப்புகளில் படித்தார்கள்.
பள்ளியில் இறுதி ஆண்டு படிக்கையில் ஒரு நாள் இருவரும் ஊரின் வெளியே இருந்த ஒரு தனியான இடத்திற்குச் சென்றார்கள். அந்த இடம் ஒரு காடு மாதிரி இருந்தது. உள்ளே சென்றுதான் பார்ப்போமே என்று இருவரும் அந்த காட்டிற்குள் நுழைந்து, வேடிக்கை பார்த்தபடி வெகு தூரம் சென்றுவிட்டனர்.
குள்ளப்பன் சொன்னான் "காடு மாதிரிதான் இருக்கிறது. ஆனால் ஒரு பூனை நாய் கூட கண்னுக்குத் தெரியவில்லையே" .குமரப்பன் சொன்னான் ' யாருக்கு தெரியும் நாய் இனத்தைச்சேர்ந்த ஓநாய் இங்கு இருக்கலாம் அல்லது பூனை இனத்தைச்சேர்ந்த சிறுத்தைப்புலி இங்கே பதுங்கியிருக்கலாம்." இதைக்கேட்டவுடன் குள்ளப்பனுக்கு கொஞ்சம் பயம் வந்தது. அவன் சொன்னான் "ஐயோ, அப்படீன்னா இங்கேயிருந்து சீக்கிரமே வெளியேறிவிடவேண்டும்"
மதியம் இரண்டு மணி ஆகிவிட்டது. இருவருக்கும் நல்ல பசி எடுக்கத் தொடங்கியது. காலையில் ஒன்பது மணிக்கு வீட்டில் சாப்பிட்டதுதான். அந்த நேரத்தில் குமரப்பன் ஒரு பப்பாளி தோப்பினைப் பார்த்தான். நிறைய பப்பாளி பழங்கள் மரங்களில் தொங்கிக்கொண்டிருந்தது. குமரப்பனால் எந்த பப்பாளி பழத்தையும் பறிக்கமுடியவில்லை. அவன் இன்னும் இரண்டு அல்லது மூன்று அடி உயரம் இருந்திருந்தால் அந்தப்பழங்களை பறித்திருக்கமுடியும். அப்போதுதான் குள்ளப்பன் ஒரு ஆலோசனை கூறினான் " குமரப்பா, என்னை உன் தலையின்மீது தூக்கிக்கொண்டால் நான் பழங்களைப் பறிக்கமுடியும்". யோசனை நன்றாக இருப்பினும் 70 கிலோ எடையுள்ள குள்ளப்பனை தூக்குவது குமரப்பனுக்குக் கொஞ்சம் கடினமாகவே இருந்தது. பல முறை முயற்சி செய்து பார்த்தான். ஆனால் தோள்வரை தூக்கியவுடன் கைவலி தாங்காமல் குள்ளப்பனை கீழே இறக்கிவிட்டான். அப்போதுதான் குள்ளப்பன் குமரப்பனால் நம்பமுடியாத ஒரு ஆலோசனையைச் சொன்னான். " சரி குமரா, இப்போது நீ என் மீது ஏறிக்கொள். நான் உன்னைத் தாங்கிக்கொள்கிறேன். நீ பழங்களைப் பறி." குமரப்பன் இதைக்கேட்டு நன்கு சிரித்தான். "என்ன குள்ளப்பா, பசியை மறக்க கொஞ்சம் தமாஷாக பேசுகிறாயா" என்றான். ஆனால் குள்ளப்பன் "நான் உண்மையாகத்தான் சொல்கிறேன். இதோ இப்போது நான் இந்த பப்பாளி மரத்தின் பக்கத்தில் குனிந்துகொள்கிறேன். என் முதுகின் மேல் நீ ஏறு" என்றான். சரி , ஒரு முறை முயற்சி செய்வோம் என்று குமரப்பன் அவன் முதுகின்மீது ஏறினான். இரண்டு மூன்று முறை கீழே விழுந்தான். ஆனால் அடுத்தமுறை குள்ளப்பன் குனிந்தபடி கெட்டியாக பப்பாளி மரத்தை பிடித்துக்கொண்டான், குமரப்பனும் பப்பாளி மரத்தினை அழுத்திக்கொண்டு குள்ளப்பன் முதுகில் ஏறினான். அந்த முறை குமரப்பனால் ஆட்டம் அதிகம் இல்லாமல் குள்ளப்பன் முதுகில் நிற்கமுடிந்தது. கைக்கு எட்டிய இரண்டு பப்பாளி பழங்களை அவன் லாவகமாக பறித்து மெதுவாக கீழே போட்டான். பின்னர் மெதுவாகக் குனிந்து கீழே இறங்கினான். குள்ளப்பனுக்கு முதுகு நன்றாக வலித்தாலும் பொறுத்துக்கொண்டான்.
பின்னர் இருவரும் இனிப்பான பப்பாளி பழத்தை ருசித்துத் தின்றனர். இருவருக்கும் பசி அடங்கவில்லை. மீண்டும் இன்னொரு பப்பாளி மரத்தின் அருகில் சென்று முன்பு செய்தமாதிரியே அந்த மரத்திலிருந்து இரண்டு பெரிய கனியான பப்பாளிப் பழங்களைப் பறித்தனர். பின்னர் அதையும் ரசித்து உண்டு இருவரும் பசியாறினார்கள்.
அதன் பிறகு இருவரும் வேகவேகமாகத் திரும்பி வரும்போதுதான், வந்த திசையிலிருந்து மாறி வேறுவழியாகச் சென்றுவிட்டனர். அப்படிச்செல்லும் வழியில் அவர்கள் இரண்டு நாய்களைக் கண்டார்கள். அந்த நாய்கள் இருவரையும் நோக்கி மெதுவாக வந்தது. அப்போது குள்ளப்பன் " குமரா , பார்ப்பதற்கு கொஞ்சம் நாய்போல இருந்தாலும் இவை நாய்கள் இல்லை ஓநாய்கள். நம்மை அடித்து சாப்பிடத்தான் நம்மருகில் வருகின்றன" என்றவுடன்தான் குமரப்பன் பயந்து போய், திடீரென்று என்ன தோன்றியதோ, குள்ளப்பனைத் தூக்கித் தன் தலையில் வைத்துக்கொண்டான். அவனைத் தலையில் தாங்கியவாறு பெரிய வினோதமான சப்தங்கள் செய்துகொண்டு குமரப்பன் அந்த நரிகளைப் பார்த்து அவை வரும் திசையிலேயே ஓடத்துவங்கினான். அவன் மேலே இருந்த குள்ளப்பனும் கைகளையும் கால்களையும் வேகமாக ஆட்டியபடி விபரீதமான 'ஆஅ ஆஆ உஉஉஉ உர்ர்ர்ர் உர்ரா ஈஈய் ஒஒஒஒ ஓஓஓஓ' போன்ற ஒலிகளை எழுப்பினான். இந்த எதிர்பாராத செயலால் அவர்களைநோக்கி வந்த இரண்டு ஓநாய்களும் பின்வாங்கி ஓடத்தொடங்கின. குமரப்பன் விடாமல் குள்ளப்பனைத் தலையில் தாங்கிக்கொண்டே அவைகளின் பின்னால் தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் ஓடினான். அந்த இரண்டு நரிகளும் மிகவும் வேகமாக எங்கோ கண்ணனுக்கு எட்டாத தூரம் ஓடி மறைந்தன.

‘குள்ளப்பா, இப்போது நீயாகவே கீழே இறங்கு’ என்று குமரப்பன் சொன்னபின், குள்ளப்பன் மெதுவாக அவன் முதுகு வழியாக கீழே இறங்கினான். சரியாக அந்த நேரத்தில் ஒரு ஜீப் அவர்கள் அருகில் வந்து நின்றது. அதிலிருந்து போலீஸ் போல உடை அணிந்த இரு நபர்கள் இறங்கினர். ஒருவர் "இந்த இடம் வனத்துறையைச் சேர்ந்தது. நீங்கள் அத்துமீறி உள்ளே நுழைந்து விட்டீர்கள். ஏன் இப்படி காட்டிற்குள் வந்தீர்கள்?" என்று கேட்டவுடன் குமரப்பன் நடந்ததைச் சொன்னான். அதைக் கேட்டுவிட்டு அந்தக் காவலாளி " நீங்கள் இருவரும் அந்த இரு நரிகளிடமிருந்து சாதுர்யமாக தப்பியதை நாங்கள் கொஞ்சம் தொலைவிலிருந்து பைனாகுலரில் பார்த்தோம். அந்த நரிகள் உங்களை நெருங்கியபோது, ஒரு வேளை தேவை பட்டால் அந்த நரிகளை துப்பாக்கியால் சுடலாம் என்று தயாராக இருந்தோம். நல்லவேளை நீங்களும் தப்பித்தீர்கள் , நரிகளும் இறக்கவில்லை. சரி வாருங்கள் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு உங்களை அருகில் உள்ள ஊரில் விடுகிறோம்" என்று சொல்லவிட்டு இருவரையும் பக்கத்தில் உள்ள ஒரு ஊரில் விட்டுச்சென்றனர். செல்லும்போது "இனி இப்படி காட்டிற்குள் நுழைந்து அபாயத்தை தேடிக்கொள்ளாதீர்கள், எச்சரிக்கையாக இருங்கள்" என்று அறிவுரை கூறிச்சென்றனர்.

நல்ல வேளையாக குமரப்பனிடம் கொஞ்சம் பணம் இருந்தது. அருகில் உள்ள கடையில் வாழைப்பழம் கிடைக்குமா என்று பார்த்தனர். ஆனால் அன்று முகூர்த்தநாள் என்பதால் எந்தக்கடையிலும் வாழைப்பழம் கிடைக்கவில்லை. ஒரு காய்கறி கடையில் வாழைக்காய் இருந்தது, தக்காளியும் இருந்தது. வெறும் வாழைக்காயைச் சாப்பிடமுடியாது என்பதால் ஒரு கிலோ தக்காளிப் பழங்கள் வாங்கிக்கொண்டு அரை கிலோவை அங்கேயே சாப்பிட்டனர். அவர்களின் நல்ல வேளை, அங்கிருந்து அவர்கள் ஊருக்கு செல்ல இரவு எட்டு மணிக்கு ஒரு பேருந்து கிடைத்தது. பேருந்தில் அமர்ந்து ஊர் திரும்புகையில் மீதம் உள்ள அரைகிலோ தக்காளிப் பழத்தையும் சாப்பிட்டனர். இருவரும் இரவு பதினோரு மணி அளவில் அவரவர் வீடு திரும்பினார்கள். இருவரது பெற்றோர்களும் தமது பிள்ளைகளைக்கண்டதும் மகிழ்ச்சிப் பெறுக அணைத்துக்கொண்டனர். நடந்த விவரங்களை அவர்கள் பெற்றோரிடம் சொன்னபோது அவர்கள் மிகவும் அதிர்ச்சியும் அதே சமயத்தில் ஆச்சரியமும் அடைந்தனர். நடந்த சம்பவம் அவர்களுக்கு ஒரு துணிச்சலான அனுபவமே. ஆயினும் அதுபோன்ற விபரீதமான செயல்களில் அவர்கள் ஈடுபடாமல் கவனமாக விழிப்புடன் இருக்கவேண்டும் என்று இருவருடைய பெற்றோர்களுமே பாராட்டி எச்சரிக்கையும் செய்தனர்.

அடுத்த நாள் இருவரும் முந்தய தினம் நடந்த சாகசக்கதையை அவர்கள் நண்பர்களுடன் பகிர்ந்தபோது அவர்கள் அதைக்கேட்டு ஆச்சரியம் அடைந்தனர். அதே நேரத்தில் இந்த இருவரும் பப்பாளி , தக்காளி பழம் சாப்பிட்ட கதையை கேட்டு வாய்விட்டுச் சிரித்தனர். அப்போதிலிருந்து அவர்கள் குள்ளப்பனை 'பப்பாளி குள்ளப்பன்' என்றும் குமரப்பனை 'தக்காளி குமரப்பன்' என்றும் வேடிக்கையுடன் கூப்பிடத்தொடங்கினர்.

இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவெனில், குமரப்பனுக்கு ஒரு தம்பி இருக்கிறான் பெயர் 'முருகப்பன்'. அதைப்போலவே குள்ளப்பனுக்கும் ஒரு அண்ணன் இருந்தான் பெயர் ' உயரப்பன் '. இதைவிட ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் முருகப்பன் உயரம் நாலடி, உயரப்பன் உயரம் ஆறடி. இதையும் தாண்டி மிகவும் ஆச்சரியத்தைத்தரும் விஷயம் தெரியுமா?
முருகப்பனும் உயரப்பனும் மிகவும் நெருங்கிய நண்பர்கள், குமரப்பன்-குள்ளப்பன் போலவே. அடடா எவ்வளவு ஆச்சரியமான ஒற்றுமைகள் . இப்போதுதான் இன்னுமொரு நம்பமுடியாத ஒரு தகவல்.

குமரப்பனுக்கு கல்யாணம் ஆன அதே நாளில்தான் குள்ளப்பனின் அண்ணன் உயரப்பனுக்கும் திருமணம் நடந்தது. ஒருவரின் திகைப்புக்கு இது போதாது என்றால் இன்னுமொரு தகவல், குமரப்பனுக்கும் உயரப்பனுக்கும் ஒரே திருமண மண்டபத்தில்தான் திருமணம் நடந்தது.

இது போதுமா, இன்னும் பிரமிப்பு வேண்டுமா? பிரமிப்புத்தானே வேண்டும் . இதோ மற்றுமொரு விஷயம், குமரப்பன் மனைவி ‘குமரிப்பெண்’ , உயரப்பனின் மனைவி 'உபரிப்பெண்' இருவரும் இரட்டையர் சகோதரிகள்.

இப்போது சொல்லப்போகும் தகவல் கேட்டால் உங்களால் நிச்சயம் நம்பமுடியாது. ஆறடி உயரம் கொண்ட குமரப்பன் மற்றும் உயரப்பன் இவர்களது மனைவிகளின் உயரம் நாலடி. கணவர்கள் ஆறடி, மனைவிமார்கள் நாலடி. வித்தியாசம் ஈரடி. இந்த இரண்டு ஜோடிகளுக்கும் ஈரடி திருக்குறள் என்றால் மிகவும் விருப்பம். மனைவிமார்கள் இருவருக்கும் நாலடியார் பாடல்கள் என்றால் இரட்டை மகிழ்ச்சி. கிட்டத்தட்ட ஐநூறு குறள்கள் இவர்கள் நான்கு பேருக்கும் அத்துப்படி.

ஆறடி கணவர்கள் இருவரும் நாலடி மனைவிகளிடம் சொல்லாமல் ஓரடி கூட வீட்டிற்கு வெளியே காலடி எடுத்துவைக்கமாட்டார்கள். புதிய மனிதர்கள் எவருடனும் பேசவேண்டும் என்றால் இந்த இரட்டையர் சகோதரிகள் குறைந்தது மூன்றடி இடைவெளி விட்டுத் தள்ளி நின்றுதான் பேசுவார்கள்.
இப்போது குமரப்பன் குள்ளப்பன் வாழ்வில் நடந்த சுவையான ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்போம்..

குமரப்பனுக்கு கல்யாணம் ஆகி ஒருமாதம் தான் ஆகியிருந்தது. குள்ளப்பனுக்கு கல்யாணம் ஆகாமல் முப்பது வருடம் தான் ஆகியிருந்தது. குமரப்பன் ஒரு நாள் குள்ளப்பனை தன் வீட்டிற்கு விருந்து உண்ண அழைத்தான்.

குமரப்பன்: என் கல்யாணத்தின்போது நீ பாடிய ' எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்' என்ற பாடலை நான் மட்டும் இல்லை என் மனைவி 'குமரிப்பெண்' கூட மிகவும் ரசித்து கேட்டாள்.

குள்ளப்பன்: உன் பெயர்க்கு ஏற்றமாதிரி 'குமரிப்பெண்' என்ற பெண்ணை வளைத்துபோட்டுகொண்டுவிட்டாய். எனக்கும் குறைந்தது ஒரு 'குள்ளச்சி' பெண்ணையாவது பாருடா.

குமரப்பன்: நிச்சயம் குள்ளா. உனக்கு நிச்சயம் ஒரு குள்ளச்சி கிடைப்பாள் .
சரி நாளை சாயங்காலம் வீட்டுக்கு வந்துடு. டின்னர் முடிச்சிட்டு போகலாம்.

குள்ளப்பன்: வெறும் கையுடன் வரமுடியாது.

குமரப்பன்: அப்போ கைகளில் மருதாணி வர்ணம் இட்டுக்கொண்டு வா.

குள்ளப்பன்: ஏண்டா இப்படி கழுத்தை அருக்கிறே. உன் கல்யாணத்திற்குப்பின் இப்போது தான் முதன்முறையாக உன் வீட்டிற்கு வரப்போகிறேன். குமரிப்பெண்ணுக்கு பிடித்த ஏதாவது பொருள் இருந்தால் சொல்லு. நான் வாங்கி வருகிறேன்.

குமரப்பன்: அவளுக்கு நயாகரா நீர்வீழ்ச்சின்னா ரொம்ப பிடிக்கும். அந்த நீர்வீழ்ச்சிக்குப்போய் ஒரு நூறு லிட்டர் தண்ணீர் கொண்டுவந்தால் அவளுக்கு மகிழ்ச்சியாக இருக்கும், இங்கே ரெண்டு நாளுக்கு குடிக்கவும் நல்ல நீர்வீழ்ச்சி தண்ணி எங்களுக்கு கிடைக்கும்.

குள்ளப்பன்: கல்யாணம் ஆகி ஒரே மாசத்துல உனக்கு இந்த அளவுக்கு கொழுப்புன்னா போகப்போக எப்படி இருக்குமோ. சரி, நானே ஏதாவது பார்த்து வாங்கி வருகிறேன்.
அடுத்தநாள் மாலை குமரப்பன் குள்ளப்பன் வருகைக்காக காத்திருந்தான். வீட்டிற்குள் கூப்பிடும் மணியோசை கேட்டு குமரப்பன் ஆர்வத்துடன் சென்று கதவைத்திறந்தான். அவனுக்கு ஒரே ஆச்சரியம். குள்ளப்பனுடன இன்னொரு குள்ளனும் உள்ளே நுழைந்தான். அந்த குள்ளன் எதோ பெரிய வண்ணமான அட்டைப்பெட்டியை தூக்கிக்கொண்டு உள்ளே நுழைந்தான். நுழைந்த குள்ளன் குள்ளப்பனைவிட இன்னும் குள்ளமாக இருந்ததால், அந்த இரண்டாவது குள்ளன் அட்டைப்பெட்டியுடன் வீட்டிற்குள் நுழைந்ததைக்கூட குமரப்பனால் உன்னிப்பாக பார்க்கமுடியவில்லை. அந்த குள்ளன் குள்ளப்பனைவிட மிகவும் வேகமாக இருந்தான்.

குமரப்பன்: வாப்பா குள்ளப்பா. இப்போதுதான் குமரிப்பெண்ணிடம் உன்னைப்பற்றி பேசிக்கொண்டிருந்தேன். என்ன ஏதோ வாங்கி வருகிறேன் என்று சொல்லிவிட்டு இரண்டு பார்ஸல்கள் வாங்கி வந்திருக்கிறேன்.

குள்ளப்பன்: குமரப்பா. இந்த இரண்டு பார்ஸல்களில் ஒன்று உங்களுக்கு இன்னொன்று எனக்கு.

குமரப்பன்: அப்படி என்றால் அட்டைப்பெட்டி எனக்கு, குட்டிகுட்டை உனக்கு அப்படித்தானே?

குள்ளப்பன்: சரியாகசொன்னாய் குமரா. அட்டைப்பெட்டி உனக்கு பரிசு. அதைத் தூக்கிக்கொண்டு வந்த குட்டை எனக்குப் பரிசு.

குமரப்பன்: கொஞ்சம் விவரமாக சொல்லடா குள்ளப்பா.

குள்ளப்பன்: இவன் பெயர் இருளப்பன். கடந்த ஒருமாதமாக நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக பழகிவருகிறோம். கல்யாணம் ஆன பின் நீ எப்படி இருப்பாய் என்று எனக்குத்தெரியாது. அதனால்தான் எனக்கு இன்னொரு நண்பனை தேர்ந்தெடுத்துக்கொண்டேன். போகப்போக தெரியும் இருளப்பன் சங்கதி.

குமரப்பன்: டேய் குள்ளப்பா, நீயும் நானும் இருபது ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கிறோம். அப்படி இருந்தும் உனக்கு என்மேல் எதற்கு சந்தேகம்?

குள்ளப்பன்: அப்படி இல்லடா குமரா. ஏதோ என் மனசுக்கு தோணிச்சு. அதனால் தான். எனக்கு இன்னொரு நண்பன் இருப்பதில் ஒன்றும் தப்பு இல்லைதானே?

குமரப்பன்: அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை குள்ளம். ஆமாம் அருளப்பன் பொருளப்பன் படிஅளப்பன் இப்படி பல நல்ல அப்பன்கள் இருக்கும்போது அவன் ஏன் இருளப்பன் என்று பேர் வைத்துக்கொண்டிருக்கிறான்?

குள்ளப்பன்: இதை நானும் அவனிடம் கேட்டேன். அதற்கு அவன் சொன்னான் "இந்தப் பெயரை எனக்கு நானே வைத்துக்கொள்ளவில்லை. நான் பிறந்தவுடன் என் முகம் இருள் சூழ்ந்து இருந்ததனால் இருளப்பன் என்று எனக்கு பெயர் வைத்துவிட்டார்கள். ஆனால் பேர் வைத்தபிறகுதான் நான் பிறந்தபோது பவர் கட் ஆகி ஹாஸ்பிடல் முழுவதும் இருள் படர்ந்திருந்தது தெரியவந்ததாம். அடுத்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் பவர் வந்துவிட்டதாம். ஆனால் என் பெயர் மட்டும் இருளப்பன் என்றே வைக்கப்பட்டுவிட்டது."

குமரப்பன்: இப்போது புரிந்தது. அதனால்தான் என்னவோ இவனுடைய முகம் கூட கொஞ்சம் இருள் சூழ்ந்தமாதிரி இருக்கிறது. சரி, அதை விடு, பெயரில் ஒன்றும் இல்லை. மனிதன் எப்படி பழகுகிறான் அதுதான் முக்கியம்.

குமரிப்பெண்: வாங்க குள்ளப்பன், ஏதோ எங்களுக்குப் பெரிய பரிசு வாங்கி வந்திருப்பீங்க என்று இருளப்பன் துணையோடு ஆசையோடு பெட்டியைத்திறந்தால், உள்ளே 25 லிட்டர் நயன்தாரா மினரல் வாட்டர்தான் இருக்கிறது.

குள்ளப்பன்: சாரி மேடம். நீங்க கேட்ட நயாகரா நீர்வீழ்ச்சி தண்ணீர் என்னால் பிடித்துக்கொண்டு வரமுடியவில்லை. ஏதோ என்னால் முடிந்தது நயன்தாரா மினரல் வாட்டர். இதையே நயாகரா நீர்வீழ்ச்சி தண்ணியாக நினைத்து குடிச்சுக்கோங்க இல்லை குளிச்சிக்கோங்க.

குமரிப்பெண் (வாய் விட்டு சிரித்தபடி): உங்களுக்கு மிகவும் நல்ல ஹால்ஸ்ய உணர்வு குள்ளப்பரே. எங்களது பரிசை மிகவும் பெரிதாகவும் அதே நேரத்தில் மிகவும் குறைந்தவிலையிலும் வாங்கி வந்துவிட்டீர்கள்.

குள்ளப்பன்: இரண்டு நாள் கழித்து இருளப்பன் உங்கள் வீட்டிற்கு வருவான்.

குமரிப்பெண்: ஐயோ, போதும்பா இந்த நயாகரா இல்லை.. இல்லை.. நயன்தாரா மினரல் வாட்டர்.

குள்ளப்பன்: அப்படி இல்லை மேடம். இந்த வாட்டர் கேனை கடையில் திருப்பி கொடுக்கவேண்டும். அதனால்தான் இருளப்பன் இரண்டு நாள் கழித்து வந்து இந்தக் கேனை உங்களிடமிருந்து வாங்கி கடையில் கொடுத்துவிடுவான். எனக்கும் கேன் டிபாசிட் 200 ரூபாய் திரும்பக்கிடைக்கும்.

சிறிது நேரத்தில் குமரிப்பெண் எல்லோருக்கும் தேநீர் கொண்டுவந்து கொடுத்தாள். இருளப்பன் அதைக் குடிக்கும்போது ரகசியமாக குள்ளப்பன் காதில் "என்ன தேநீர் ரொம்பவும் தண்ணீயா இருக்கு?". அப்படிச்சொன்னதை குமரப்பன் ஒட்டுகேட்டுவிட்டு சொன்னான் "குமரிப்பெண் குள்ளப்பன் தந்த பரிசினைத் தாராளமாக பயன்படுத்த ஆரம்பித்துவிட்டாள்" . அதைகேட்டுவிட்டு குள்ளப்பனும் இருளப்பனும் சமையல் அறையில் இருந்த குமரிப்பெண்ணும் கொல்லென்று சிரித்தனர்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அவர்களுக்கு கிடைத்த டின்னர் என்ன என்பதை நீங்களே யூகிக்கலாம்.
1 நீர் தோசை
2 நீர் சோறு
3 நீர் மோரு
4 நீர் பாயசம்
5 இடையில் குடிக்க நயன்தாரா நீர்

இரவு டின்னர் முடிந்தது. குள்ளப்பன் குமரப்பனை நகைச்சுவையுடன் கடிந்துகொண்டான். ' டேய், உங்க இருவருக்கும் நல்ல கொழுப்பு. நயாகரா நீர்வீழ்ச்சி அப்படி இப்படின்னுட்டு எல்லா பலகாரத்தையும் நிறைய நீர் ஊற்றி செய்து, எங்களுக்கு கொழுப்பே இல்லாமல் டின்னர் கொடுத்துவிட்டீர்கள்."
குமரப்பன் சிரித்துக்கொண்டே சொன்னான் "உனக்கு இல்லாத கொழுப்பா குள்ளா, இன்னொரு நாள் ஜாம் ஜாமுண்ணு உனக்கு குலோப் ஜாமும் பூரி மசாலாவும் செய்து இனிய அமுது செய்து படைத்துவிட்டால் போயிற்று."
அப்போது இருளப்பன் குமரப்பனிடம் மெதுவாகப் பேசினான் " நல்ல வேளை நண்பரே, நீங்கள் இதைச்சொல்லாமல் இருந்திருந்தால் அடுத்தமுறை நாங்கள் உங்களுக்கு ஐந்து லிட்டர் டிஸ்டில் வாட்டர்தான் வாங்கி வந்திருப்போம்'. இதை கேட்டுவிட்டு அவன் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்ட குமரிப்பெண்ணும், காது கொடுக்காமலேயே கேட்ட குள்ளப்பனும் வாய்விட்டுச் சிரித்தனர். குமரப்பன் வயிறுவலிக்கச் சிரித்தான்.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (13-Feb-23, 7:20 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 322

மேலே