அரசாங்கம்

மண்டையைப் பிளக்கும் உச்சி வெயிலில் தள்ளாடித் தள்ளாடிப் பேரனை அழைத்துக்கொண்டு ஒருவழியாகப் பஞ்சாயத்து ஆபிஸ் வந்து சேர்ந்துவிட்டாள் மாரியம்மா.

அம்மா இனி வரவே மாட்டாள் என்பது தெரியாமல் பாட்டியின் பக்கத்தில் நின்று ஐஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தான், பேரன்.

"ஏ.. தாயி! எதுக்கு இங்க நிக்கிற"

அய்யா!
"அஞ்சு நாளைக்கு முன்னாடி என் மவ இறந்துட்டாயா, அதான் சான்றிதழ் வாங்க வந்து இருக்கேன்"

"சரி..சரி..எத்தன மணிக்கு எங்கன இறந்தானு சொல்லு"

"சிதம்பரம் ஆஸ்பத்தரியிலங்கய்யா, நல்லாத்தான் இருந்தா, தாகமாயிருக்குன்னு ஒரு சொம்பு தண்ணி கொண்டு கொடுத்தேன். குடிச்சவ திடீர்ன்னு நெஞ்சை புடிச்சிட்டு கீழ விழுந்துட்டா"

"அடப் பாவமே .. சரி… டாக்டர் கையெழுத்து போட்ட சீட்டு எங்க இருக்கு? அது இருந்தா தான் சான்றிதழ் ரெடி பண்ண முடியும்" என்றார், அலுவலர்.

"ஐயா! ஆஸ்பத்திரில போய் கேட்டா உன் பொண்ணு வர்ற வழியிலேயே இறந்துட்டா, அதனால கையெழுத்து போட்டுத் தரமுடியாதுன்னு டாக்டர் சொல்றாரு

உங்கள நம்பி வந்தா நீங்க இப்படி சொல்றீங்க. தாய் தகப்பன் இல்லாத புள்ள, கொஞ்சம் பாத்து பண்ணுங்கய்யா" என்று சொல்லிவிட்டு, வெறும் குச்சியைக் கடித்துக் கொண்டிருந்த பேரனின் தலையைக் கோதிவிட்டாள், மாரியம்மா பாட்டி.

"டாக்டர் கையெழுத்து இல்லாம சான்றிதழ் எல்லாம் ரெடி பண்ண முடியாது. சீக்கிரமா எடத்த காலி பண்ணு" என்றார், அலுவலர்.

பேரனை அழைத்துக்கொண்டு அழுது கொண்டே வெளியேறினாள்,பாட்டி.

"ஏ.. கெழவி! இங்கட்டு வா..
ஒரு ஆயிரம் ரூவா மட்டும் இருந்தா வெட்டு, சாயங்காலமே உன் கையில சான்றிதழ் இருக்கும் என்று பதனமாய்ச் சொன்னார், வாசலில் பேனாவும் பேப்பருமாய் அமர்ந்திருந்த வெள்ளைச் சட்டைக்காரர்".

"யோவ்...என் மவ இன்னும் சாகலன்னு ஆபிசர் நம்புறான், டாக்டர் நம்புறான், ஏன் என் பேரன் நம்புறான், நா மட்டும் நம்பக் கூடாதா? இனிமே நானும் நம்பிட்டுப் போறேன்.

நான் என்ன மசுத்துக்கு சான்றிதழ் வாங்கணும். போங்கடா.. என்று மூக்குச்சளியைச் சிந்தி பஞ்சாயத்து ஆபிஸ் சுவரிலேயே தடவி விட்டு வெளியேறினாள்,பாட்டி.

பதினாறாம் நாள் காரியம் முடிந்ததும் பள்ளிக்குச் சென்ற பேரன், வீடு வரும்போது கையில் சான்றிதழோடு வந்தான். எதுவும் புரியாமல் பாட்டியும் சான்றிதழை வாங்கிப் பார்த்தாள். எவ்விதச் செலவும் அலைச்சலும் இல்லாமல் பேரன் வாங்கி வந்தது "சாதிச் சான்றிதழ்".

🥲

எழுதியவர் : மன்னை சுரேஷ் (12-Feb-23, 11:55 am)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
Tanglish : arasaangam
பார்வை : 65

மேலே