சென்னையில் ஒரு நாள்
சென்னையில் ஒரு நாள்
கதைக்களம் - வடபழனி
நீங்கள் பெரு நகரங்களில் வேலை செய்த காலங்களில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியது உண்டா?
அப்படி என்றால் இந்த கதை உங்களுக்கு ஓரளவு பொருந்தும்...
"டீ" எனப்படும் தேநீரின் மகத்துவமும், முக்கியத்துவமும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
ஏனெனில் பெரும்பாலான சென்னை வாசிகளின் காலை உணவு ஒரு டீயிலே முடிந்து போகும்.
எனது சென்னை வாழ்க்கையின் காலை உணவு பெரும்பாலான தருணங்களில் டீ தான்...
அட யாருடா இவன் எப்பவும் டீயை பத்தியே பேசிகிட்டு இருக்கான் என சிலர் நினைக்கலாம்...
கொஞ்சம் பொறுங்க...
நான் இங்கு சென்னையில் எனது சுகமான சோகமான அனுபவங்களை பற்றியோ அல்லது டீயைப் பற்றியோ கூறப்போவதில்லை...
நான் பேசப்போவது ஒரு டீ கடைக்காரரை பற்றியும் அவர் தந்து போன ஒரு மன அழுத்தத்தை பற்றியும் தான்...
கதையின் முடிவில் உங்களுக்கும் அந்த அழுத்தம் பற்றியிருப்பின் ஆச்சரியமல்ல!
2011 வடபழனி
ஒரு விடுமுறை நாளன்று சோம்பேறித்தனமாக காலையில் எழுந்தேன் 10.30க்கு !
நான் வழக்கமாக செல்லும் தேநீர் விடுதிக்கு சென்ற பொழுது
விடுதியில் உணவு பாத்திரங்கள் காலியாகி,கழுவி கவிழ்ந்து கிடக்க, காலை உணவு முடிந்து விட்டது என்பதை எனக்கு உணர்த்தியது...
அந்த டீக்கடையில் டீ மாஸ்டர் மட்டும் நிரந்தரமாய் இருந்ததில்லை திடீர் திடீரென புது டீ மாஸ்டர்கள் காட்சி தருவார்கள்...
நான் வெகு நாட்களாக அந்த டீக்கடையில் டீ குடிப்பதால் கடை முதலாளி எனக்கு நல்ல பழக்கம். அவர் அதிகமாக பேசுவார் நானும் அவருடன் பேசுவேன். நான் பேசாவிட்டாலும் அவர் பேசுவார். சில நேரங்களில் எனக்கு அவரது பேச்சு சலிப்பு தட்டி விடும் எப்போதடா பேச்சை முடிப்பார் என விரக்திக்கு உள்ளாவேன்.
இந்த கடையில் நான் கண்ட ஆச்சரியங்களை உங்களோடு பகிர்கிறேன்...
ஒன்று
"இங்கு புகையிலை பொருட்கள் விற்கபடுவதில்லை" என கையால் எழுதப்பட்ட வாசகம்!
இரண்டு
கடையில் கண்ணாடி காட்சி பெட்டிகளில் குடிசை தொழில் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்பட்ட தின்பண்டங்கள் இருக்கும்.
"ஜங்க் ஃபுட்ஸ், கார்பரேட் ட்ரிங்க்ஸ்" இவைகள் யாவும் இங்கு எப்போதும் விற்பனை கிடையாது...
மூன்றாவது
காட்சி கண்ணாடி பெட்டிகளின் மேல் வைக்கபடிருந்த இரண்டு தேநீர் குவளைகள். இரண்டிலும் வெவ்வேறு வகையான டீ தூள்கள் கலக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கும்.
அன்றைய தினம் நான் எனக்கான டீயை டீ மாஸ்டரிடம்
சொல்ல அவர் அப்போதுதான் டீ கிளாஸ்களை சுடுநீரில் வாஷ் செய்து கொண்டு இருந்தார்.
சரி அவர் டீ பொறுமையாக போடட்டும் என முதலாளியிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தேன். சில பல விஷயங்களைப் பேசிய பிறகு நான் வெகு நாட்களாக கேட்க வேண்டிய சந்தேகங்களை அவரிடம் கேட்டேன்.
முதலில் கண்ணாடி காட்சி பெட்டிகளின் மேல் இருந்த கண்ணாடி குவளைகள் பற்றி..
அதற்கு அவர் அளித்த பதில்
"ஒன்று உண்மையான டீ தூள் ; மற்றொன்று விஷம்" என்றார்
என்ன விஷமா?? என்றேன்
ஆமா சார் கலப்பட டீ தூள் விஷம் தானே?? என்றார்
மேலும் தொடர்ந்தார்..
"நல்ல டீ தூள் என்பது கொதிநிலையில் நிறம் மாறும், கலப்பட டீ தூள் உடனே நிறம் மாறும்"
"உங்களை போல வரவங்க இதை தெரிஞ்சுக்கனும்னு இங்க வெச்சி இருக்கேன்" என்றார்.
"நல்ல விளம்பர யுக்தி" என்றேன்
"இது விளம்பரம் இல்ல சார், விழிப்புணர்வு.
நான் அந்தக் கட்சியின்(தொடப்பத்தை சின்னமாக கொண்ட கட்சியின் பெயரை கூறி) உறுப்பினர் என்றார்.
எங்களது கொள்கை அனைத்திலும் மக்களுக்கான நல்வாழ்வு , அனைத்திலும் விழிப்புணர்வு என எனது சந்தேகங்களுக்கு பதிலுரை பொழிந்தார்...
நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ஸ்டெர்லைட் செய்யப்பட்ட டீ கிளாசில் டீ மாஸ்டர் டீயை கொண்டு வந்து எனக்கு கொடுத்தார்.
மேலும் அவர் தொடர்ந்தார் "எங்களிடம் செறிவூட்டப்பட்ட குளிர்பானங்கள் இல்லை"
நாங்கள் பயன்படுத்தும் தேநீர் துகள்கள் விலை மிகுதி எனினும் நேரடியாக தேயிலை தோட்டங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுபவை.
இல்லாதவருக்கும் , கைவிடப் பட்டவருக்கும் இங்கு என்றுமே தேநீர் இலவசம் தான்"
என்றார்.
நான் என் ஆர்வ மிகுதியால் அவர் காதில் கிசுகிசுத்தேன் " இங்கே போட்டி வியாபாரம் ஜாஸ்தி ஆச்சே , உங்கள் யுக்தியையும் சிந்தனையையும் மத்தவங்க... என நான் முடிக்கும் முன்னரே...
"அத பத்தி எல்லாம் எனக்கு கவலை இல்லை சார், எனக்கு மக்களுக்கு நல்லதை மட்டுமே கொண்டு சேர்கணும்.
அது எண்ணமா இருந்தாலும் சரி !
கொள்கையா இருந்தாலும் சரி!!
டீ யா இருந்தாலும் சரி!!!
என முடித்தார்!!!!
அத்துடன் டீக்கடை முதலாளியுடன் எனது உரையை முடித்துக் கொண்டு நான் சாப்பிட்ட டீ மற்றும் இரண்டு பட்டர் பிஸ்கட்டுகளுக்கான காசு 15 ரூபாயை கொடுத்துவிட்டு விடைபெற்றேன். (அப்போ டீ விலை ஐந்து ரூபாய்)
அன்றைய தினம் எனக்கு விடுமுறை என்பதால் ஹேர் கட் செய்ய அந்த டீ கடைக்கு எதிரே உள்ள சலூனுக்கு சென்றேன்...
நான் வழக்கமாக ஹேர் கட் செய்யும் சலூன் அன்றைய தினம் விடுமுறை என்பதால் இந்த புதிய சலூன் கடைக்கு வர வேண்டிய அவசியம் ஆனது.
சலூன்காரர் அறியப்பட்டவரும் அல்ல...
"யென் சார் ஊட்டா ஆய்த்தா?? (என்னா சார் சாப்பாடு ஆச்சா) என்றார். அவர் பேசிய மொழியிலிருந்து அவர் கர்நாடகத்தை சார்ந்தவர் என்பது மட்டும் புரிந்தது. அந்த வார்த்தைகள் மட்டும் ஞாபகம் உள்ளது. மத்தபடி எனக்கு கன்னடம் மொழி தெரியாது.
சலூன் கடைக்காரன் தமிழ் மலையாளம் ஹிந்தி என மூன்று மொழிகளையும் கலந்த மாதிரி ஒரு பாஷை பேசினான். அவன் கிட்ட தலையை கொடுக்கவே பயமா இருந்தது...
அவன் கேட்ட கேள்விக்கு "இல்ல இப்போதான் எதிர் கடையில் டீ குடிச்சேன்" என்றேன், நம்ம டீ கடையை கைகாட்டி...
கணீர் என சிரித்தவன் "அவனொந்து மென்டல் சார்" (அவன் ஒரு மென்டல் சார்) என்றான்
டீ கடை முதலாளியை நோக்கி !!!
எனக்கு எரிச்சலானது...
கோபம் வந்தது... வெளி மாநிலத்துக்காரன் நம்ம ஊருக்கு பிழைக்க வந்து நமது ஆட்களையே மெண்டல் என்று கூறுகிறானே என்று...
அவனிடம் வாதம் செய்யலாம் என்றால் என்ன செய்வது எனது தலையில் கத்திரி போட்டு ஆரம்பித்து விட்டானே...
ஏற்கனவே அவன் மீது பயம் ஹேர் கட் ஒழுங்காக செய்வானா என்று...
இதில் அவனிடம் வாதமிட்டால் எனது மண்டையில் கொண்டை வைத்து விடுவானோ என்றதொரு பயம்...
ஆவேசத்தை அடக்கிக் கொண்டு அமைதியாக ஹேர் கட் முடிந்து வெளியே வந்தேன்...
பக்கத்திலிருந்த பெட்டி கடையில் ஷாம்பு வாங்கினேன். அந்தப் பெட்டிக்கடைக்காரன் எனக்கு ஷாம்பு எடுத்துக் கொடுத்துக் கொண்டே மற்றொருவரிடம் அந்த டீக்கடைக்காரர் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தான்...
" ஆமா ஆமா அவன் சரியான மெண்டல் அவன் டீ கடைக்கு போனால் மொக்கை போட்டே கொன்னுடுவான் மனுஷன்" என்ற வார்த்தைகள் மட்டும் காதில் விழுந்தது...
பெட்டிக்கடைக்காரன் தமிழன். என்னடா இவனும் இப்படி சொல்கிறானே என்று மனம் யோசிக்க ஆரம்பித்தது...
ஆனாலும் அந்த ஏரியாவில் அந்த டீக்கடை தான் பிரபலம். அவரை மெண்டல் என்று கூறிய சலூன் கடை காரனும் பெட்டிக்கடை காரணம் டீ குடிப்பது அந்த டீக்கடையில் தான்...
என்னுடைய ரூமுக்கு வந்த நான் குளித்து முடித்தேன்...
எனது எண்ணத்தில் கேள்வி கரையான்கள்!
நல்ல விஷயமாகவே இருந்தாலும் ஒருவருக்கு திகட்டும் அளவுக்கு போதிப்பது நமக்கு கெடுதலே என்பது மட்டும் என்னால் உணர முடிந்தது...
எனக்களித்த விளக்கங்களை தனி ஒரு வாடிக்கையாளருக்கு அளிப்பாரா "மென்டல்" என அறியப்பட்ட அந்த டீ கடைக்காரர்?
அல்லது இது அவரது அரசியல் கொள்கை பறைசாற்றலின் யுக்தியா?
இந்த கொள்கைகளால் அவரது வியாபாரம் தலைக்குமா?? நிலைக்குமா??
அனைத்தையும் தாண்டி ஓங்கி ஒலித்த ஒரு கேள்வி..
"அவர் மென்டலா ???? அவரா மென்டல்????
நேரம் ஒதுக்கி படித்தவர்களுக்கு நன்றி🙏