முயற்சி திருவினையாக்கும்

முயற்சி திருவினையாக்கும்

தமிழ் நாட்டில் உள்ள பல கிராமங்கள் விவசாயத்தை மட்டுமே தொழிலாக செய்து தங்கள் வாழ்க்கையை நடத்துவது நம்மில் பலருக்கு தெரியும். தங்கள் வயல்களையும் அதன் விளைச்சலையும் நம்பி குழந்தைகுட்டிகளுடன் வாழ்ந்து சிலநேரங்களில் விளைச்சல் குறைந்து தாங்க முடியாத கடன் சுமைகள் வர வேறுவழி தெரியாமல் தங்கள் உயிரை தியாகம் செய்கின்றனர் என்பது நாம் அறிந்த ஒருஉண்மையே.அப்படிப்பட்ட கிராமத்தில் ஒன்றுதான் வேடந்தவாடி. அங்கு உள்ளவர்கள் நெல்,பயறு,நிலக்கடலை,கம்பு,சோளம் கரும்பு போன்ற பயிர்களை விளைவித்து அவைகளை அரசாங்கத்திடமும்அருகில் உள்ள வியாபாரிகளிடமும் மொத்த விலை பேசி விற்று விடுவது வழக்கம்.
எல்லா குடும்பமும் விவசாய குடும்பமானதால் நிலங்களை உழும் பொழுது ஒருவருக்கு ஒருவர் அவரவர் வருத்தங்களை தெரிவித்து கொள்வர். சிலர் மற்றவர்களுக்கு தங்களால் முடிந்த பண உதவியையும், சில யோசனைகளையும் தெரிவித்து அவர்கள் கஷ்டங்களை குறைக்க வழி செய்வார்கள்.கிராமத்தில் நடக்கும் எந்த ஒரு பண்டிகையும்,சடங்குகளும் எல்லோர் குடும்பங்களுக்கும் ஒரு கூடும் இடமாகி விருந்துகள் பொதுவி ருந்தாகி விடும். அங்கேயே இருந்து வாழ்ந்த முதிய தலைமுறையை சேர்ந்தவர்கள் தங்கள் பழைய நினைவுகளை அங்கே பகிர்ந்து கொள்வர். பெருமழையோ,வெள்ளமோ அல்லது கொடும் காற்றோ வீசி பயிர்கள் நாசமடைந்தால் எல்லோரும் ஒன்றாகி அரசிடம் முறையிடுவது,துன்பங்களில் தோள்கொடுப்பது போன்ற வற்றை பார்க்கும் பொழுது அந்த கிராமமே ஒரே குடும்பம்போல விளங்கும். அவர்கள் யாவரும் இதுபோல் ஒரு பொது விருந்தில் கலந்து கொண்ட பொழுது அந்த ஊரில் தாத்தா என அழைக்கப்பட்ட ஒரு பெரியவர் தனது பேரனை அவர்களுக்குஅறிமுக படுத்தினார். செந்தில்நாதன் என்ற அந்த இளைய தலைமுறை பையன் தனது விவசாய கல்லூரியில் படிப்பதை பற்றி அவர்களுக்கு கூறி ஒரு ஆலோசனையும் சொன்னான். நாம் இயற்கை வளம் கொண்டு காய்கறிகளை விளைவித்து அவற்றை விற்று லாபம் அடையலாம்.இயற்கை விவசாயம் இன்று மிகவும் முன்னேரியுள்ளது.எல்லோரும் இந்த காய்கறிகளை விருப்பமுடன் வாங்கி உபயோகப் படுத்து கின்றனர்.
இதனால் தங்கள் உடம்பையும் கவனித்து கொள்கின்றனர். நாம் இதைக் கூட்டுறவு முறையில் செய்ய, அரசாங்கமும் உதவி செய்யும். ஒரு சந்தை வைத்து சிறிதாக ஆரம்பிப்போம் எனக் கூற அனைவரும் அதை ஆமோதித்தனர்.
இதை உடனே செயலாக்க முனைந்து சில மாதங்களில் அதற்கு வழியையும் அமைத்தனர். ஒவ்வொரு ஞாயிறும் சந்தை வைப்பது என முடிவு செய்தனர் அவர்கள் அங்கு ஒரு விளைச்சல் இல்லாத வண்டிகள் நடமாட்டமுள்ள நிலத்தில் சிறு கொட்டகை இட்டு அதை ஒரு சந்தையாக்கி .வீட்டு தோட்டத்தில் விளைந்த காற்கறிகளை விற்ற வழி அமைத்தனர்.அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை ஒரு நல்ல கூட்டு வியாபார அமைப்பாக்கி அரசிடம் சான்றிதழ் வாங்கி பெரிதாக வளர வைக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டனர் அதற்காக விவசாய படிப்பு படித்த செந்தில்நாதனை
தேர்தெடுத்தனர்.அவனும் அவர்களுக்கு வேண்டியன செய்வதாக சொல்லி அரசிடம் சென்று சந்தைக்கு தேவையான முதலீட்டையும் அரசாங்கக் கட்டுப்பாடுகளையும் அறிந்து கொண்டு வந்தான். அரசாங்கம் கொடுத்த பல காகிதங்களுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் கையொப்பம் இட்டு அங்கு இருந்த அனைவரும் செந்தில்நாதனிடம் கொடுக்க அவனும் அரசிடம் ஒப்படைத்து அதற்கான சான்றிதழ் பெறுவதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டான். அருகே செல்ல செல்ல அரசு ஒன்றன் பின் ஒன்றாக தடைகளைக் கொண்டு வந்து இது சரியில்லை, வேறு வேண்டும் எனக் கூறி பல மாதங்களைக் கடத்தியது.
ஊர் மக்களும் செந்தில் நாதனும் இந்த முயற்சியால் மிகவும் மனம் நொந்து விட்டனர்.நல்லது செய்வதற்கு இவ்வளவு சோதனையா என நினைத்து நினைத்து வெம்பினர்.பேச்சளவில் அரசு கூட்டுறவிற்கு பச்சைக் கொடி காட்டினாலும் நடைமுறையில் அதைச் செயல் படுத்தவில்லை, ஆதரிக்கவும் இல்லை என்பது தெளிவாகியது.செந்தில்நாதன் தனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை தன்னால் நடத்த முடியவில்லையே என மனம் சோர்ந்து அவர்களிடம் மன்னிப்பும் கேட்கத் தயாராக இருந்தான். செந்தில் நாதனைப் பார்த்து தன் பேரன் கிராமத்திற்கே நல்லது செய்யப் போவதை நினைத்து பெருமையுடன் நடந்து கொண்டிருந்த அவன் தாத்தா மனம் ஒடிந்து அவன் ஒரு மூலையில் இருப்பதை பார்க்க முடியாமல் மிக வேதனை அடைந்தார்.அவனை உற்சாகப்படுத்தி மீண்டும் பார்க்கவேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் அவனது தாத்தா அவனிடம் ஒருநாள் செந்தில்நாதா விடாது முயற்சிசெய்தால் நீ நினைப்பதும் அதற்கு மேலேயும் நடக்கும்,நம்பிக்கையோடு இரு என்று கூறி, ஒரு சிறிய கதையைப் படிப்பினையாக கூறினார். நம்மைப் போலவே விவசாயத்தை நம்பி வாழ்ந்த ஒரு விவசாயி வளர்த்து வந்த பொதிகளை சுமக்கும் வயதான கழுதை ஒன்று தவறி அவன் தோட்டத்தில் உள்ள வறண்ட கிணற்றில் விழுந்துவிடுகிறது.
உள்ளே விழுந்த கழுதை இரவெல்லாம் அலறிக்கொண்டே இருந்தது அதை எப்படி கிணற்றிலிருந்து வெளியேற்றிக் காப்பாற்றுவது என்று அவன் விடிய விடிய யோசித்தும் அவனுக்கு ஒரு யோசனையும் புலப்படவில்லை.
அதைக் காப்பாற்ற எடுக்கும் எந்த முயற்சியும் அந்தக் கழுதையின் விலையை விட அதிகம் செலவு செய்யக் கூடியதாக இருந்தது.

அந்தக் கிணறு எப்படியும் மூடப்படவேண்டிய ஒன்று,தவிர அது மிகவும் வயதான கழுதை என்பதால் அதைக் காப்பாற்றுவது வீண்வேலை என்று முடிவு செய்த அவன், கழுதையுடன் அப்படியே அந்தக் கிணற்றை மூடிவிடுவது என்று முடிவு செய்தான்.
அக்கம் பக்கத்தினரை உதவிக்குக் கூப்பிட அனைவரும் திரண்டனர். சற்று அருகில் இருந்த ஒரு மண் திட்டிலிருந்து மண்ணை மண்வெட்டியில் அள்ளிக் கொண்டு வந்து அந்தக் கிணற்றில் அனைவரும் போட ஆரம்பித்தனர்.
கழுதை என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து தற்போது மரண பயத்தில் அலறியது. ஆனால் அதன் அலறலை யாரும் சட்டை செய்யவில்லை தொடர்ந்து மண்ணை அள்ளி அள்ளி இவர்கள் கொட்ட கொஞ்சம் நேரம்ஆனதும் அதன் அலறல் சத்தம் அடங்கிவிட்டது .
ஒரு இருபது நிமிடம் மண்ணை அள்ளிக் கொட்டியவுடன் கிணற்றுக்குள்ளே விவசாயி எட்டிப் பார்க்க,அவன் பார்த்த காட்சி அவனை வியப்பிலாழ்த்தியது.
ஒவ்வொரு முறையும் மண்ணைக் கொட்டும்போது,கழுதை தனது உடலை ஒரு முறை உதறிவிட்டு, மண்ணை கீழே தள்ளி, அந்த மண்ணின் மீதே நின்று வந்தது.இப்படியே பல அடிகள் அது மேலே வந்திருந்தது.இவர்கள் மேலும் மேலும் மண்ணை போடப் போட கழுதை தனது முயற்சியை கைவிடாது, உடலை உதறி உதறி மண்ணை கீழே தள்ளி தள்ளி அதன் மீது ஏறி நின்று வந்தது. கழுதையின் இடைவிடாத இந்த முயற்சியால் அனைவரும் வியக்கும் வண்ணம் ஒரு வழியாக கிணற்றின் விளிம்பிற்கே அது வந்துவிட்டது.வயோதிய கழுதை விளிம்பை எட்டியவுடன் மகிழ்ச்சியில் கனைத்து விட்டு ஒரே ஓட்டமாக ஓடி கழுதை தோட்டத்திற்குள் சென்று மறைந்தது.
நமது இந்த உலக வாழ்க்கை பல சந்தர்ப்பங்களில் இப்படித் தான் நம்மை படுகுழியில் தள்ளிக் குப்பைகளையும், மண்ணையும் நம் மீது கொட்டி நம்மை சமாதி கட்ட பார்க்கும், ஆனால் நாம் தான் இந்தக் கழுதைபோல தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கொண்டு, அவற்றை உதறித் தள்ளி மேலே வரவேண்டும்.
நம்மை நோக்கி வீசப்படும் ஒவ்வொரு கல்லையும் சாமர்த்தியமாக பிடித்து படிக்கற்களாக்கிக் கொள்ளவேண்டும்,
எத்தனை பெரிய குழியில் நீங்கள் விழுந்தாலும்.நன்றி இல்லாத, நண்பர்கள், குடும்பத்தார் ,பணியிடத்தின் முதலாளி, இப்படியாக எல்லோராலும் ஒதுக்கப்பட்டு உங்களை அழிக்க நினைத்தாலும் “இத்தோடு நம் கதை முடிந்தது” என்று கருதாமல் விடாமுயற்சி என்ற ஒன்றைக் கொண்டு நீங்கள் நிச்சயம் மேலே வரலாம்.
“நீங்கள் எதுக்குள்ளே விழுந்தா என்ன?, உங்க மேல எது விழுந்தா என்ன?
எல்லாத்தையும் உதறி விட்டு, நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்.
செந்தில் நாதனிடம் தாத்தா இந்த கதையை கூறியவுடன் அவன் ஒரு புது தெம்பு வந்ததை
உணர்ந்தான்.தாத்தா நாளைக்கே நான் அரசங்கத்திடம் சென்று மீணடும் அவர்கள் கேட்ட வற்றை எல்லாம் கொடுத்து விட்டு நம்ம கிராமத்துக்கு அந்த சந்தை வர வேண்டியவற்றைச் செய்கிறேன். என் மேலே மக்கள் வைத்திருக்கிற நம்பிக்கையை வீண் போகவிடமாட்டேன் எனக் கூறி அம்மா சாப்பாடு தயாரா இருக்கா பசி வயிற்றை கிள்ளுகிறது சிறுகுடலை பெருகுடல் சாப்பிட ஆரம்பித்து விட்டது என பழைய செந்தில்நாதனாகி
குரல் கொடுத்தவாறே உள்ளே சென்றான்.
தாத்தா கூறிய கதை செந்தில்நாதனுக்கு மட்டும் அல்ல நம் எல்லோருக்கும் பொருந்தும்.
"முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் " என்ற வாசகம் முற்றிலும் உண்மையானது தான். எல்லோரும்
விடா முயற்சியால் நாம் நினைத்ததை முடிப்போம் சாதனைகள் பல செய்வோம் புது சரித்திரம் படைப்போம் வெல்வோம்.

எழுதியவர் : கே என் ராம் (24-Feb-23, 6:56 am)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 194

மேலே