எண்ணுவதெல்லாம் செய்ய முடிவதில்லை

எண்ணுவதெல்லாம் செய்ய முடிவதில்லை
கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து வருடங்கள் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களுக்கு பணியாற்றி விட்டு எப்படியோ எனது ஊருக்கு அருகில் இருக்கும் பள்ளிக்கு பணி மாறி வந்து விட்டேன். இனி என்ன மூன்று வருஷம்தான்,. இங்கேயே இருந்து ரிட்டையர்டு ஆகி விட வேண்டியதுதான். எல்லோருக்குமே கடைசியாக ஊர் பக்கம் வருவதற்கு முக்கியமான மூன்று காரணங்கள் இருக்கலாம், முதலாவது அவர்களது உறவுகள், சமூக மக்கள், இரண்டாவது அவர்களுக்கு தோட்டம், காடு, வியாபாரம் போன்றவைகள் பார்த்துக்கொள்ளலாம். மூன்றாவது நமது ஊருக்கு, இல்லை பள்ளிக்கு ஏதாவது செய்து விட்டு போவோமே என்று இருக்கலாம். இந்த கடைசி காரணத்தைத்தான் அடிக்கடி வெளியில் சொல்லிக்கொள்கிறேன்..
எனக்கு மேலே சொன்ன மூன்று காரணங்களும் இருந்தன. சமூக மக்கள் அதிகமாகவும், என் தம்பியே எங்கள் சமூகத்தில் பெரிய மனிதனாகவும் இருக்கிறான். அது போக கொஞ்சம் தோட்டம் உண்டு. கொடுக்கல் வாங்கல் தொழிலும் உண்டு. இருந்தாலும் நான் நினைத்தது, எப்படியாவது எனது ஊரில் இருக்கும் இந்த பள்ளியை குறைந்த பட்சம் மாவட்டத்திலாவது பிரபலமடைய செய்ய வேண்டும்.
நான் பள்ளியிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தள்ளித்தான் இருக்கிறேன். தினமும் நடந்துதான் செல்கிறேன். வாகனங்கள் எதையும் விரும்புவதில்லை. காரணம் நான் நடந்து போகும்போது பல தரப்பட்ட மனிதரகளை சந்திக்க முடிகிறது. எல்லா சமூக மக்களும் என்னிடம் அந்நியோன்மாய் இருக்கிறார்கள்.
வாசலில் அறுவாளை கல்லில் தேய்த்தவாறு விசாரிக்கும் ‘காளி’ என்ன ஹெட்மாஸ்டர் சார் என் பையன் ஒழுங்கா படிக்கிறானா? குறைந்தது ஆயிரத்து ஐநூறு மாணவர்களுக்கு மேல் படிக்கும் பள்ளியில் காளியின் பையனை ஞாபகம் வைத்து சொல்ல வேண்டும். இப்படி எண்ணற்ற விசாரிப்புகள். அதுவும் விவசாய கூலிகளாய் சென்று கொண்டிருக்கும் பெண்கள், ஆண்கள் இவர்கள் தங்கள் குழந்தைகளை பற்றி விசாரிக்கும் போது மனதுக்கு மகிழ்ச்சியாய் இருக்கும்.
எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. சமூகம் என்ற பிரிவுதான் ஒவ்வொரு முறையும் எங்களை பயமுறுத்திக் கொண்டே இருக்கும். காரணம் மாணவர்களை ஒரு ஆசிரியராய் கண்டிக்க முயற்சிக்கும்போது அது வேறு ஒரு கோணத்தில் பார்க்கப்பட்டு ஒரு சில ஜாதி தலைவர்களாலும், அரசியல்வாதிகளாலும் ஊதப்பட்டு புகைச்சலாகி கடைசியில் பிரச்சினயாகி விடுகிறது.
இதனால் ஆசிரியர்களுக்குள் ஒரு உதறல் எப்பொழுதும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. நகரங்களில் அவைகள் பெரிதாக எடுத்து கொள்ளப்படுவதில்லை. ஆனால் இங்கு இதுதான் மிகப்பெரிய பிரச்சினை.
பள்ளியில் புதிதாக வந்திருந்த “டிரில் மாஸ்டர் இளங்கோவை” பார்த்தேன். இருபத்தி ஐந்து வயது இருக்கலாம். பெரிய கனவுகளுடன் இருந்தான். மாநில அளவில் ஓட்டம், தாவி குதித்தல் இவைகளில் சாதித்திருப்பான் போலிருக்கிறது. சார் நம்ம ஸ்டுடன்ஸ் கிட்டே என்ன என்ன திறமைகள் இருக்குது அப்படீங்கறதை சோதிச்சு பார்க்கப்போறேன். அவங்க எதுல திறமையா இருக்கறாங்களோ அதுல ‘டெவலப்’ பண்ணிடலாம், என்னிடம் பணிவாய் சொன்னான்.
எனக்கும் ஆசைதான். என்னுடைய பள்ளி மாணவ, மாணவிகளின் பெயர் பிரபலமாவது. இவனும் இளைஞனாயிருக்கிறான், விளையாட்டில் சாதித்திருக்கிறான். சரி தம்பி, பார்த்து செய்யுங்க, உங்களுக்கு உதவியா ஒரு லேடீஸ் டீச்சரையும் கூட உதவிக்கு கூப்பிட்டுக்குங்க, சூசகமாய் சொன்னேன்.
இளைஞன், சற்று குழம்பினான், இருந்தாலும் தலைமையாசிரியர் சொல்வதிலும் அர்த்தம் இருக்கும். தலையாட்டினான்.
கடைசியாக நான்கு மாணவிகளையும், ஆறு மாணவர்களையும் குறிப்பிட்டு அடையாளம் காட்டினான். சார் இவங்களுக்கு டிரெயினிங் கொடுத்தா நம்ம ஸ்கூலுக்கு பேர் வாங்கி கொடுக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு.
அதற்குள்ளேயே இந்த மாணவ மாணவிகளை தேர்ந்தெடுத்ததிலேயே ஒரு சிலரிடம் மெல்லிய புகைச்சல் பரவி இருந்தது. இந்த வாத்தியார் அவங்க ஆளுங்களா பார்த்து எடுத்திருக்காரு, என் தம்பியே ஒரு முறை சாடையாக என்ன உங்க ஸ்கூல்ல டிரில் மாஸ்டர் ஒருத்தரு வந்திருக்காராமா?
அடுத்து எல்லாரையும் தொட்டு தொட்டு பேசறாரு, இப்படி புகைச்சல்களை என் காதுக்குள் கொண்டு வந்து வேண்டுமென்றே போடும் ஒரு சிலர்.
அவர்களின் திருப்திக்கு நானே ஒரு முறை அவன் பயிற்சி கொடுக்கும் இடத்துக்கு சென்றேன். அவன் அப்பொழுது கோபமாய் இருந்தான். பத்து மாணவ மாணவிகளையும் வரிசையாய் நிற்கவைத்து விளாசித் தள்ளிக்கொண்டிருந்தான்.
நீங்க ஒருத்தர் கூட உங்க ‘அச்சீவ்மெண்டை முடிக்கலை’, என்ன நினைச்சு கிட்டிருக்கீங்க, முதலில் இருந்த ஒரு மாணவனின் இரு தோள்களிலும் கையை வைத்து அவன் முகத்தை கூர்ந்து கவனித்து.
“இங்க பாரு என் கண்ணை பாரு” நீ ஓட ஆரம்பிக்கும்போது உன்னுடைய பார்வை இப்ப என்னை பார்க்கறமாதிரியே நீ அடையப்போற இலக்கை நோக்கியே பார்த்துகிட்டு இருக்கணும். அப்பத்தான் அது உன் பக்கத்துல இருக்கற மாதிரி உனக்கு தோணும், அதைய இப்பவே தொட்டுடலாம் அப்படீங்கற உணர்ச்சி வரும்.. புரியுதா? இப்படியே ஒவ்வொரு மாணவ மாணவிகளின் தோளை தொட்டு உணர்ச்சி வசப்பட்டு சொல்லிக்கொண்டிருந்தான்.
இவர்களை சுற்றி நின்று கொண்டிருந்த ஒரு சிலருக்கு இது பிடிக்கவில்லை என்பதை அவர்கள் முக பாவனைகள் மூலம் கண்டு கொண்டேன். அதுவும் பெண் ஆசிரியர்களே கொஞ்சம் முக சுழிப்புடன்தான் இருந்தார்கள். என்னை பார்த்தவுடன் முகத்தை மாற்ற முயன்றாலும் அவர்களால் முடியவில்லை. அதென்ன பையனையும் பொண்ணையும் ஒரே மாதிரி…..முணங்கல்கள்..
அன்று மாலை அந்த பையனை வரவழைத்து அரை மணி நேரம் பேசினேன். நான் இப்படி ஒரு கோணத்தில் வெளியிலிருப்போர் பார்ப்பதாக சொன்னவுடன் அடிபட்டவன் போல் என்னை பார்த்தான். சார்..சத்தியமா நான் அந்த கோணத்தில் நினைத்து கூட பார்க்கலை சார் சொல்லும் போதே கண்களில் நீர் கோர்த்து நின்றது.
அவன் இரு தோள்களையும் பற்றினேன், நீ சொன்ன வார்த்தைகளைத்தான் உனக்கும் சொல்கிறேன். என் கண்களை பார். உன்னை காயப்படுத்தவேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் கொஞ்ச நாட்களில் உன்னை வேறுவிதமாக காயப்படுத்தி விடுவார்கள் என்ற பயத்தில் சொல்கிறேன்.. சமூக ரீதியாகவும் உன்னை காயப் படுத்தலாம், அல்லது ஆண் பெண் பேதத்தை வைத்தும் உன்னை காயப்படுத்தலாம். புரிகிறதா?
மெளனமாய் தலையாட்டினான்..
மறு நாள் வழக்கம் போல் ‘பிரேயருக்கு’ விசிலடித்து ஒழுங்கு படுத்திவிட்டு விளையாட்டு அறைக்கு சென்று விட்டான். முன்னரெல்லாம் விளையாட்டில் சாதிக்கபோகும் மாணவ மாணவிகளிடம் அரட்டை அடித்து கொண்டிருப்பான்.அல்லது துறு துறு என்று எங்காவது சுற்றிக்கொண்டிருப்பான்.
இந்த நிகழ்ச்சிகளுக்கு பின் அவன் ஒரு டிரில் மாஸ்டராய் மட்டும் வேலைகளை செய்து கொண்டிருந்தான்.
நான் இப்பொழுதெல்லாம் எனது பள்ளியை தமிழகத்தில் புகழ்பெற வைக்கப் போகிறேன் என்று பெருமை பேசுவதில்லை. அப்படி ஒரு சில இடங்களில் வாய் தவறி சொல்லிவிட்டாலும் சுற்றும் முற்றும் அந்த ‘டிரில் மாஸ்டர்’ இருக்கிறாரா என்று பார்த்து கொள்கிறேன்.. நான் என்ன செய்ய முடியும்? நீங்கள் என்னை கோழை என்று சொன்னாலும்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (25-Feb-23, 11:11 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 105

மேலே