152 தலைவியோடு உறையின் தருங்கேடு இல்லை - கணவன் மனைவியர் இயல்பு 44

கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்;
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
நிரையில் தொடங்கினால் 12 எழுத்தெண்ணிக்கை தானே வரும்!
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு. (முதலிரண்டு
சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று
ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

ஓவி யாரும் ஒழிக வுறுவல்கள்
மேவி நாளும் விளைகநஞ் செல்வியை
ஆவி யைஅமு தத்தை அனத்தினைத்
தேவி யைப்பிரி யோஞ்சிதை வென்னெஞ்சே. 44

- கணவன் மனைவியர் இயல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

நெஞ்சே! நம்மைவிட்டு யாரும் நீங்கட்டும். துன்பங்கள் நாளும் பொருந்தி உண்டாகட்டும். நம் வாழ்வை, உயிரை, அமுதத்தை, அன்னம் போன்ற கற்புடைய தம் தலைவியோடு சேர்ந்து வாழ்ந்தும், தலைவியைப் பிரியாதுமிருந்தால் நமக்கு வரும் கேடு என்ன இருக்கின்றது? கேடு ஏதும் இல்லை என்று இப்பாடலாசிரியர் கூறுகிறார்.

ஓவி - விட்டு. உறுவல்கள் - துன்பங்கள்.
சிதைவு - கேடு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Feb-23, 7:43 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

சிறந்த கட்டுரைகள்

மேலே