588 தொண்டர்க்கு எல்லாமாம் துணைவனைத் தொழு - தெய்வத்தன்மையும் வாழ்த்தும் 46
தரவு கொச்சகக் கலிப்பா
தொண்டரெனும் பயிர்தழையச் சொரிமுகிலை யவரிதய
முண்டகங்கள் நெகிழ்த்தொளியை மும்மலம்வே ரறவீசும்
சண்டவளி யினைப்பாவத் தழலவிக்குந் தண்புனலைக்
கண்டவர்தஞ் சுகநிலையைக் கருதாயோ மனமே
காணரிய பரஞ்சுடரைக் கருதாயோ மனமே, 46
- தெய்வத்தன்மையும் வாழ்த்தும், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
நடமாடுங் கோயிலாம் நல்லுயிர்க்கும், படமாடும் கோயிலாம் திருக்கோவிற்கும் நாற்பெருந் தொண்டினை நாளும் இயன்றவாறு இயற்றும் தொண்டரெனும் எழிற்பயிர் செழிக்கப் பொழியும் செழுமழையை, தொண்டர் திருவுள்ளமாகிய தாமரையை மலரச் செய்யும் அறிவொளியை, மும்மலமாகிய `ஒன்றாய் முளைத்தெழுந்து எத்தனையோ கவடு விட்ட பெருமரத்தை வேரற வீழ்த்தும் சூறைக் காற்றை, பாவப் பெருநெருப்பினைப் பட்டொழிய அணைக்கும் அருள் நீரை, ஓர்ந்துள்ளம் உள்ளதுணர்ந்த உரவோராம் மெய்யடியார்க்குப் பொய்யாப் பேரின்பை நெஞ்சமே வஞ்சமின்றிக் கருதுவாயாக.
அவன் அருட்கண்ணே கண்ணாகவன்றி வேறொரு வழியானும் காண்டற்கரிய உள்ளொளி பெருக்கும் உலப்பிலாப் பேரொளியை உன்னுவாயாக.
முகில் - மழை. இதயம் - நெஞ்சம்; திருவுள்ளம். முண்டகம் - தாமரை.
சண்டவளி - சூறைக்காற்று. சுகநிலை - பேரின்பநிலை. பரஞ்சுடர் - பேரொளி.