நாவிதன்வாள் சேப்பிலைக்குக் கூர்த்து விடல் - பழமொழி நானூறு 284

நேரிசை வெண்பா

இப்பாடல் ’ர்’ ஆசிடை யிட்ட எதுகை - பா’ர்’த்தாற்றா
(‘த்’ ‘ப்’ வல்லின எதுகை, தூ உயிர் ஏறிய எதுகை)

காத்தாற்று கிற்பாரைக் கண்டால் எதிருரையார்
பா’ர்’த்தாற்றா தாரைப் பரியாது - மீதூர்தல்
யாத்ததே சில்லார் படையாண்மை நாவிதன்வாள்
சேப்பிலைக்குக் கூர்த்து விடல். 284

- பழமொழி நானூறு

பொருளுரை:

தம்மைக் காத்துப் பகைவரோடு எதிராக நின்று உடற்றவல்லாரைக் கண்ட அளவில் மாறு கூறுதலும் இலராகி பார்த்த அளவில் ஆற்றாராகிப் புறங்கொடுத்து ஓடுவாரை இரங்குதலின்றி மேற்செல்லலான் தனக்குளதாம் புகழினைப் பெறாதவர்கள் செய்யும் படையாண்மை அம்பட்டன் கத்தி சேப்பிலையை அறுக்கக் கூர்மை உடையதாயினவாறு போலும்.

கருத்து:

புறங்கொடுத்து ஓடுவார் மீது படை விடலாகாது என்றது இது.

விளக்கம்:

ஆற்றாதார் மீது மேற்சேறல் தேசு இல்லாமைக் கேதுவாயிற்று. 'யாத்த தேசு' என்றது வீரர்கள் போர் செய்து வென்றியெய்தும் தொழிலராதலின் தமக்குளதாம் புகழினைப் புறங்கொடுத்தார் மீது மேற்சேறலான் அழித்துக் கோடலின் இல்லார் என்றார். அவர் எதிருரையாது மீதூர்தல் நாவிதன் வாள் மயிர் வினைக்குப் பயன்படாது சேப்பிலை யறுக்கப் பயன்பட்டாற் போலும்.

'நாவிதன் வாள் சேப்பிலைக்குக் கூர்த்து விடல்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Mar-23, 11:39 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 7

சிறந்த கட்டுரைகள்

மேலே