தீப்பெண்ணின் தொழில் - சிறுபஞ்ச மூலம் 24

நேரிசை வெண்பா

கள்ளுண்டல் காணிற் கணவற் பிரிந்துறைதல்
வெள்கில ளாய்ப்பிறர் இற்சேறல் - உள்ளிப்
பிறர்கரும மாராய்தல் தீப்பெண் கிளைமைத்
திறமதுதீப் பெண்ணின் தொழில். 24

- சிறுபஞ்ச மூலம்

பொருளுரை:

பெண்கள் குணத்தைப்பற்றி ஆராய்ந்து பார்க்குமிடத்து,

கள்ளுண்டலும், புணர்ச்சி வேண்டாது தன் கணவனைப் பிரிந்துறைதலும்,

நாணுதல் இல்லாதவளாய் பிறர்மனைக்குட் செல்லுதலும்,

பிறர் கருமத்தை நினைத்து பிறருடன் ஆராய்தலும்,

தீயபெண்டிரோடு நேயமுடைமையும் ஆகிய ஐந்தும் தனக்கேயுரியதாக தீய பெண்டிரின் தொழில்களாம்.

பொழிப்புரை:

ஆராயுங்காற் கள்ளுண்டலும், தங்கணவனைப் புணர்ச்சி வேண்டாதே பிரிந்துறைதலும், நாணிலளாய்ப் பிறருடைய மனைக்கட் சேறலும், பிறர் கருமத்தை நினைத்துப் பிறருடன் ஆராய்தலும், தீப்பெண்ணினோடு இணங்குதலும் என இவ்வைந்துந் தனக்கே கூறாகத் தீப்பெண்ணின் தொழில்.

கருத்துரை:

கள்ளுண்டல் முதலிய ஐந்தும் தீப்பெண்ணின் தொழில் என்க.

கள்ளுண்டல் தன் மதிமயக்குக்கும், தன் குடிப்பழிக்கு ஏதுவாவது. தீப் பெண்டிரிணக்கம் தனக்குத் தீங்கு பயக்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Mar-23, 10:22 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 35

சிறந்த கட்டுரைகள்

மேலே