துளங்கா நிலைகாணார் தொக்கீர் பசுவால் இளங்காற் றுறவா தவர் - சிறுபஞ்ச மூலம் 23

நேரிசை வெண்பா

வடிவிளமை வாய்த்த வனப்பு வணங்காக்
குடிகுலமென் றைந்துங் குறித்து - முடியா
துளங்கா நிலைகாணார் தொக்கீர் பசுவால்
இளங்காற் றுறவா தவர்! 23

- சிறுபஞ்ச மூலம்

பொருளுரை:

உருவம், இளம்பருவம், பெற்ற அழகு, தாழாத குடிப்பிறப்பு, தாழாத குலம் என்று சொல்லப்பட்ட இவ்வைந்ததும் தாமெண்ணி நுகர்ச்சி முடியப்பெற்று அழியாத நிலையைக் காணமாட்டார். ஆதலால், இளம் பருவத்திலேயே நீங்கித் தவஞ் செய்யாதவர் கூடி பாரத்தை இழுக்கின்ற எருதோடு ஒப்பர்!

பொழிப்புரை:

வடிவும் இளமையும் வாயத்த வனப்பும், தாழ்வில்லாத குடிப்பிறப்பும், நற்குலமும் என்று சொல்லப்பட்ட இவ்வைந்தும் தாங்குறித்த நுகர்ச்சி நுகர்ந்து முடியுமளவு நிற்கு நிலைமை யாவருங் காணமாட்டார். ஆதலாற் கூடியொரு பாரத்தை இழுக்கும் எருதோடு ஒப்பர் இளங் காலத்திலே துறவாதார்!

கருத்துரை:

உருவு, இளம்பருவம், அழகு, உயர்குடி, உயர்குலம் இவ்வவைந்தும் முடிவுபோக நுகர்வது அருமையாதலால், இளம் பருவத்திலேயே துறவாதவர் பாரமிழுத்துச் செல் எருது என்றபடி.

வணங்கா என்பது குலத்துடனும் சேர்க்கப்பட்டது; துறத்தல் - இருவகைப் பறறுக்களையும் விடுதல், முடியா என்பதைப் பலவின்பால் வினைமுற்றாக்கி நுகர்ந்து முடிய மாட்டா எனலுமாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Mar-23, 9:30 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

சிறந்த கட்டுரைகள்

மேலே