மறைப்பினும் ஆகாதே தஞ்சாதி மிக்கு விடும் - பழமொழி நானூறு 285

நேரிசை வெண்பா
(’ய்’ ஆசிடை யிட்ட எதுகை - மே’ய்’ப்பாட்ட)

காப்பான் மடமகள் காப்பான்கைப் பட்டிருந்தும்
மே’ய்’ப்பாட்ட தென்றுண்ணாள் ஆயினாள் - தீப்புகைபோல்
மஞ்சாடு வெற்ப! மறைப்பினும் ஆகாதே
தஞ்சாதி மிக்கு விடும். 285

- பழமொழி நானூறு

பொருளுரை:

தீயின் புகையைப்போல் மேகம் பரவி உலாவுகின்ற மலைநாடனே!

மந்தையைக் காக்கும் இடையனின் மகள் உலகத்தினைக் காக்கும் அரசனுக்கு மனைவியாயிருந்தும், ஒருநாள் பால் உண்ணும் போது மேய்ச்சல் ஆட்டினது பால் இதுவாதலால் மதுரமாயிருந்ததில்லை யென்று அப்பாலை உண்ணாது நீக்கினாள்.

ஒருவர் தங்குலத்திற்குரிய ஒழுக்கத்தை மறைத்தாராயினும் மறைபடாது தமது குலத்திற் குரிய ஒழுக்கம் அவருக்கு முற்பட்டுத் தோன்றிக் குலத்தினைப் பிறரறியச் செய்யும்.

கருத்து:

குலத்திற்குரிய ஒழுக்கம் மறைப்பினும் மறைபடாது முற்பட்டுத் தோன்றும்.

விளக்கம்:

இடையர் மகள் ஆட்டின் பால் சுவையை நன்றாக அறிவாளாதலால், இது சூல் கொண்ட ஆட்டின் பாலாதலால் இனிமையாக இல்லை யென்று கூறினாள்.

ஆடுகள் எல்லாம் மேய்க்கப்படும் தன்மையவாயினும், சூல்கொண்ட ஆடுகள் கட்டாயம் மேய்க்கப்படும் தன்மையை உடையன. அது கருதியே சூல் கொண்ட ஆட்டிற்கு மேய்ப்பாடு என்று கூறினார்.

ஆகவே, மேய்ப்பாடு என்றது சூல்கொண்ட ஆடேயாம். சூல்கொண்ட ஆடுகள் சூல்கொண்ட பின்னரும் சிலநாட்கள் பால் தருதல் உண்டு ஆயினும், அப்பால் இனிமையுடையதாய் இருப்பதில்லை.

அரசனுடைய மனைவியாயிருந்தும் தன் சாதியைத் தானே வெளிப்படுத்துதல் போல, ஒழுக்கங்களை எவ்வளவு மறைப்பினும் அவை முற்பட்டுத் தோன்றிக் குலத்தினை அறிவிக்கும் என்பதாம்.

'மறைப்பினும் ஆகாதே தஞ்சாதி மிக்குவிடும்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Mar-23, 11:46 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

மேலே