நின்னடை நின்நின்று அறிகிற்பார் இல் - பழமொழி நானூறு 288
இன்னிசை வெண்பா
தந்நடை நோக்கார் தமர்வந்த வா(று) அறியார்
செந்நடை சேராச் சிறியார்போல் ஆகாது,
நின்நடை யானே நடஅத்தா! நின்னடை
நின்நின்று அறிகிற்பார் இல். 288
- பழமொழி நானூறு
பொருளுரை:
அத்தனே! நினது ஒழுக்கத்தை உன்னிடத்தினின்றும் அறிதலுடையார் இல்லை, (நீயே அறிவாய் ஆகையால்) தமது ஒழுக்கத்தை ஆராய்தலிலராய்த் தம் சுற்றத்தார் ஒழுகிவந்த வரலாற்றையும் அறிதலிலராய்,
செவ்விய நடையைச் சேராத அறிவிற் சிறியார் போல் ஒழுகாது நினக்கு விதிக்கப்பட்ட நின்குடிக்கேற்ற ஒழுக்கத்தின்படியே ஒழுகக் கடவாயாக!
கருத்து:
ஒவ்வொருவரும் தத்தம் குடிக்கேற்ப ஒழுகுதல் வேண்டும்.
விளக்க்ம்:
பிறர் நினது ஒழுக்கத்தை அறிதல் அருமையின் உண்மையாகவே ஒழுகுக என்பார், 'நின்னடையானே நட' என்றார்.
செம்மையாகிய நடை செந்நடை எனப்பட்டது. அஃதாவது தத்தம் நிலைக்கு ஓதப்பட்ட ஒழுக்கினை உடையராதல்,
தமக்கு விதிக்கப்பட்ட ஒழுக்கினை நூன்முறையான் ஆராய்தலும், தம் உறவினர் எங்ஙனம் ஒழுகிவந்தார் என அவர் ஒழுக்கினை ஆராய்தலும் நன்னெறியில் நிற்றற் குரிய வழிகளாம்.
'நின்னடை நின்னின்று அறிகிற்பார் இல்' - இஃது இச்செய்யுளில் வந்த பழமொழி.