எழிலி முழங்குந் திசையெல்லாம் நெய்தல் அறைந்தன்ன நீர்த்து – நாலடியார் 392

நேரிசை வெண்பா

தம்மமர் காதலர் தார்சூழ் அணியகலம்
விம்ம முயங்குந் துணையில்லார்க்(கு) - இம்மெனப்
பெய்ய எழிலி முழங்குந் திசையெல்லாம்
நெய்தல் அறைந்தன்ன நீர்த்து 392

- காமநுதலியல், நாலடியார்

பொருளுரை:

தம்மால் அன்பு செய்யப்படுங் காதலரது மலர்மாலை யணிந்த அழகிய அகன்ற ஆகத்தைக் கொங்கைகள் பூரிக்க மருவி யின்புறுமோர் ஆதரவில்லாத எம்போலும் பிரிந்த மகளிர்க்கு இம்மென்று மழை பொழிய மேகம் இடித்தொலிக்குந் திசையெல்லாம் சாப்பறை அறைந்தாற் போன்ற தன்மையுடையது.

கருத்து;

பிரிவினால் அன்புசெய்து இரங்குவார்க்குக் காமம் மாட்சிமைப்படும்.

விளக்கம்:

‘காதலர்' என்றமையால் தலைவர் தம்மிடம் அன்பு செய்தலும் பெறப்பட்டது. ‘துணை' யென்றாள், தலைவன் றொடர்பு ஒன்றே தம் வாழ்க்கைக்குத் துணையல்லது பிறிதன்றென்றற்கு. இம்மென வென்பது ஒலிக்குறிப்பு கிளர்ந்தோதினார்,

பருவங் கருதினமையின். எல்லாமென்பது தொறுப்பொருளதாகலின் ஒருமையின் முடிந்தது. இது, பருவங்கண்டு ஆற்றாளாய்த் தலைவி தன்னுட் கலுழ்ந்து கூறியது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Mar-23, 7:47 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 51

சிறந்த கட்டுரைகள்

மேலே