நீள்கழித் தண்சேர்ப்ப புல்லாப் புலப்பதோர் ஆறு – நாலடியார் 391

நேரிசை வெண்பா

முயங்காக்காற் பாயும் பசலைமற் றூடி
உயங்காக்கால் உப்பின்றாம் காமம்; - வயங்கோதம்
நில்லாத் திரையலைக்கும் நீள்கழித் தண்சேர்ப்ப!
புல்லாப் புலப்பதோர் ஆறு 391

- காமநுதலியல், நாலடியார்

பொருளுரை:

தலைவியை மருவாவிடின் அவளுடம்பிற் பசலைநிறம் பரவும்; ஆனால் அவள் இடையிடையே ஊடல்கொண்டு உள்ளம் மெலியாவிடின் காமவுணர்வு சுவையில்லாததாகும்; ஆதலால் விளங்குகின்ற கடலானது ஒரு படியிலும் நில்லாத தன் அலைகளால் அலைத்தெதிர்கின்ற நீண்ட கழியினையுடைய குளிர்ந்த துறைவனே! காமத்திற்கு ஊடிப் புணர்வது ஓர் இனிய நெறியாகும்!

கருத்து:

ஊடலுங் கூடலும் காமம் மாட்சிமைப்படுதற்கு ஏது.

விளக்கம்:

பசலை - ஒளிமழுக்கம். உப்பு - சுவையென்னும் பொருட்டு, சற்றே குறையினுங் கூடினுஞ் சுவை கெட்டு மற்றளவின் நிற்கச் சுவை பயப்பதொரு பொருளாகலின், அவ் வியல்பினரான ஊடற் சுவைக்கு ஈதுரைக்கப்படும்.

அலை எதிர்தலாற் கழிநீர் நிறைந்து உப்புமிக்கு மாட்சிமைப்படுதலின், தலைவன்பாற் குறை கண்டு அதனால் ஒருநிலையினும் நில்லாது கடலலை போற் கொந்தளிக்கும் உள்ளமுடையளான தலைவி, தன்கண் வந்து கூடுகின்ற தலைவனைத் தனது ஊடலால் எதிர்த்து அவனுணர்வை நீர்மையுஞ் சுவையும் மிகுவித்து மாட்சிமைப்படுத்துவள் என்பது ‘நில்லாத் திரையலைக்கும் நீள்கழி' என்னும் அடைமொழியின் கருத்தாம்.

‘புலவாப் புல்லுவதோராறு' என்று மாற்றி எதிர் நிரனிறையாகக் கொள்க. தலை மகளை ஊடல் நீக்கிக் கூடிய தலைமகற்கு, முன்னம் வாயில் நேர்ந்த தோழி உவகை மிக்குக் கூறியது. இதனாற் காமம் மாட்சிமைப் படுவதோ ராறு நுவலப்பட்டது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Mar-23, 7:34 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

சிறந்த கட்டுரைகள்

மேலே