செவ்வன்நோற் பாரும் எளியாரை எள்ளாதார் இல் - பழமொழி நானூறு 287

இன்னிசை வெண்பா

ஒளியாரை மீதூர்ந்(து) ஒழுகுவ(து) அல்லால்
களியானை மன்னர்க்கோ கைகடத்தல் ஏதம்
துளியுண் பறவைபோல் செவ்வன்நோற் பாரும்
எளியாரை எள்ளாதார் இல். 287

- பழமொழி நானூறு

பொருளுரை:

நீர்த்துளியையே உண்ணுகின்ற வானம்பாடியைப் போல செம்மையான ஒன்றினையே நோக்கித் தவம் செய்கின்றவர்களுள்ளும் எளியவர்களைச் சினந்து இகழாதார் யாரும் இல்லை;

அதுபோல, செருக்குப் பொருந்திய யானைப் படையை உடைய அரசர்களுக்கு தம்மோடு மாறுபட்டு ஒழுகும் எளிய அரசர்களை மேற்பட்டுச் சென்று போரிட்டு வென்று ஒழுகுவதே யல்லாமல் அது செய்யாது இகழ்ச்சியால் நீக்குதல் துன்பந் தருவதாம்.

கருத்து:

தன்னோடு மாறுபட்டொழுகும் எளிய அரசர்களை அரசன் உடனே சென்று வெல்க.

விளக்கம்:

'பறவைபோல் நோற்பார்' என்றது வானம்பாடி உண்ணுதற்கு மழைத்துளி ஒன்றனையே எதிர்நோக்கி நிற்பதுபோல,

நோற்பாரும் தம் மனப்பட்ட அதனையே நோக்கித் தவஞ்செய்வர் என்பதாம். எளியாரை என்றது, அவர் தவத்திற்கு மாறுபட்டு நிற்போரை.

மேல் எளியாரை வேறல் வேண்டும் எனக் கூறவேண்டுதலின் தவத்திற்கு மாறுபட்டு நிற்போரை 'எளியார்' என்றார்.

ஒளியார் என்றது. அரசன் என்னும் பொருட்டாய் நின்றது. எளியாரை என்று பின்னர்க் கூறப்படுதலின் எளிய அரசர்களை என்பது பெறப்பட்டது.

அன்றியும் 'களியானை மன்னர்க்கோ' என்றமையானும் அவர் எளியார் என்பது பெறப்படும். 'மெலியார்மேல் மேக பகை' என்றலின் அது 'கை' எனப்பட்டது.

'ஏதம்' என்றார், தன்னால் வேறலாயிருக்கும் பொழுதே எளிய அரசர்களைக் கோறாதொழிவார், அவர் வலியராய் உயிர்த்த துணையானே இறந்தொழிவார் என்பதைக் கருதி.

'செவ்வன் நோற்பாரும் எளியாரை எள்ளாதார் இல்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Mar-23, 6:48 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 11

சிறந்த கட்டுரைகள்

மேலே