ஆற்றக் கரும்பனை யன்ன துடைத்து - பழமொழி நானூறு 286

இன்னிசை வெண்பா

விரும்பி அடைந்தார்க்கும் சுற்றத் தவர்க்கும்
வருந்தும் பசிகளையார் வம்பர்க் குதவல்
இரும்பணைவில் வென்ற புருவத்தாய்! ஆற்றக்
கரும்பனை யன்ன துடைத்து. 286

- பழமொழி நானூறு

பொருளுரை:

பெரிய மூங்கிலாகிய வில்லினைத் தனது வடிவத்தால் வென்ற புருவத்தினையுடையாய்! உணவிற்கு ஒன்றுமின்மையால் வருந்தி அறிமுகமுண்மையால் தன்னை விரும்பி வந்து அடைந்தவர்களுக்கும், தம் உறவினர்க்கும் அவர்களை வருத்துகின்ற பசியினை நீக்காராகி புதிய அயலார்க்கு உதவி செய்தல் மிகவும் (தன்னைப் பாதுகாத்து ஓம்பினார்க்குப் பயன்படாது நெடுங்காலஞ் சென்று பிறர்க்குப் பயன்படும்) கரிய பனைபோலும் தன்மையை உடையது.

கருத்து:

அறிவிலார் தமர் பசித்திருப்பப் பிறர்க்கீவர்; இஃது அடாது என்பதாம். 'வருத்தும்' என்பது 'வருந்தும்' என எதுகை நோக்கி மெலிந்து நின்றது.

விளக்கம்:

'விரும்பி' என்றமையாலும் 'வம்பர்' என்றமையாலும் அடைந்தார்க்கும் என்றது, முன்னர் அறிமுகம் உண்மையால் அடைந்தவர்களுக்கும் என்றபடி.

துறந்தார், துவ்வாதவர், இறந்தார் என்பார்க்குத் துணையாக நின்று களைகணாய் நிற்றல், உணவு கொடுத்தல், நீர்க்கடன் கொடுத்தல் முதலியன செய்தல் கடனாதலின் 'அடைந்தார்க்கும்' என்றும், 'தமர்கண் வளமையும் முந்துற நாடிப் புறந்தரல் ஓம்புக' என முன்னர் ஓதுதலின் 'சுற்றத்தவர்க்கும்' என்றும்,

'ஆற்றக் கரும்பனை யன்ன துடைத்து' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Mar-23, 6:26 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

மேலே