பைங்கரும்பு மென்றிருந்து பாகு செயல் - பழமொழி நானூறு 289

நேரிசை வெண்பா

மல்லற் பெருஞ்செல்வம் மாண்டவர் பெற்றக்கால்
செல்வுழியும் ஏமாப்பச் செய்வதாம் - மெல்லியல்
சென்றொசிந் தொல்கு நுசுப்பினாய் பைங்கரும்பு
மென்றிருந்து பாகு செயல். 289

- பழமொழி நானூறு

பொருளுரை:

மென்மையான சாயலையும், தளர்ந்து துவண்டு வளையும் இடையினையும் உடையாய்!

வளமையைத் தரும் மிக்க செல்வத்தை மாட்சிமையுடையார் பெற்றால் இனிச் செல்லுகின்ற மறுமையிலும் இன்புறுமாறு அதற்கான அறத்தைச் செய்து கொள்வது,

பசிய கரும்பினைச் சுவைத்தறிந்து மேலும் சுவைக்கப் பாகு செய்து கொள்ளுதலை யொக்கும்.

கருத்து:

பொருள் பெற்றால் இம்மைக்கும் மறுமைக்கும் -ஆவனவாகிய அறத்தை அதனைக் கொண்டு செய்து கொள்க.

விளக்கம்:

'செல்வுழியும்' என்ற இறந்தது தழீஇய உம்மையான் இம்மைக்குரிய புகழ் செய்து கொள்ளலும் கொள்ளப்படும். அங்ஙனம் இரண்டும் செய்து கோடல் கரும்பினைச் சுவைத்துப் பின்னும் சுவைத்தற்குப் பாகு செய்து வைத்துக் கொள்ளுதலை யொக்கும்.

மறுமைக்கு வேண்டுவனவற்றைப் பொருள் பெற்ற பொழுதே அதன் அருமையறிந்து செய்து கொள்ளுதலின், அவர் 'மாண்டவர்' எனப்பட்டார். மாட்சிமையில்லார் செல்வம் பெற்றால், மறுமையிலும் துன்புறத்தக்க செயலைச் செய்து கொள்வர் என்ற பொருள் ஆற்றலாற் கொள்ளப்படும்.

'கரும்பு மென்றிருந்து பாகு செயல்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Mar-23, 6:28 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 31

சிறந்த கட்டுரைகள்

மேலே