வயது முதிர்ச்சி மனமுதிர்ச்சியைத் தரவில்லை

நான் கடந்த ஒரு வருடமாக கோயம்பத்தூரில் வாடகை வீட்டில் வசித்துவருகிறேன். வீட்டின் உரிமையாளர் மிகவும் நல்ல மனம் படைத்த மனிதர். இவர் வளைகுடா தேசம் ஒன்றில் ஆங்கில ஆசிரியராக பணி செய்துவருகிறார், அங்கே குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.
சொல்லவேண்டுமெனில் இவரைப்போன்ற மனிதர்களை நான் கண்டது மிகவும் குறைந்த அளவிலேயே.

சிறிது நாட்களுக்கு முன்பு இவர் என்னிடம் அலைபேசியில் உரையாடினார். அவருடைய மகளின் மருத்துவம் சம்பந்தப்பட்ட படிப்பு கோயம்பத்தூரில் என்பதால் அவருடைய மனைவியும் மகளும் மட்டும் கோயம்பத்தூர் வரப்போவதாக குறிப்பிட்டார். நான் நினைத்தேன் ' ஓ, அப்படி என்றால் நாம் ஜாகையை மாற்றவேண்டியதுதான்' என்று. அப்படி நினைத்துக்கொண்டிருக்கையிலேயே உரிமையாளர்' என் மனைவி நம் சொந்த வீட்டில்தான் தங்கவேண்டும் என்று விருப்பம் கொண்டிருந்தாள். ஆயினும் மகளின் கல்லூரி சொந்த வீட்டிலிருந்து அதிக தூரம் இருப்பதால், கல்லூரிக்கருகிலேயே ஒரு வாடகை வீட்டை ஏற்பாடு செய்துகொண்டு அவர்கள் இருவரும் தங்குவார்கள் என்று முடிவெடுத்துவிட்டோம். எனவே நீங்கள் இப்போதைக்கு வீட்டைக் காலி செய்யத்தேவையில்லை" என்று சொன்னார்.
இந்தக் கட்டம் வரையில் எங்கள் இருவரின் பேச்சுவார்த்தைகள் அருமையாகவே நடந்தது. இதற்கு பின்னர் வீட்டு உரிமையாளர் " நீங்கள் வீட்டிற்கு வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. நீங்கள் குடிவருகையில் நீங்கள் கேட்டதன்பேரில் நான் குறிப்பிட்ட தொகையைவிடக்குறைந்த வாடகைக்கே உங்களை குடிவைத்தேன். இப்போது நீங்களே விசாரித்து பார்த்து தெரிந்துகொள்ளலாம், நம்முடைய வீட்டுவாளாகத்தில் வாடகை நிலவரம் என்ன என்பதை. மேலும் எனக்கும் செலவுகள் அதிகரித்துக்கொண்டு போகிறது. எனவே, அடுத்த மாதத்திலிருந்து ஆயிரம் ரூபாய் அதிகரித்து வாடகை கொடுங்கள்" என்றார். நான் அதற்கு எந்தவித ஒரு மறுப்பும் சொல்லாமல் ' சரி, அப்படியே ஆகட்டும்' என்று சொன்னேன். அவர் ஆயிரம் ரூபாய் கூட்டினாலும், அவர் வீட்டிற்கு நான் கொடுக்கும் வாடகை மிகவும் நியாயமானதே.

அவர் அலைபேசி உரையாடலை முடிக்கும் நேரத்தில் என் மனதிற்குள் ஏதோ ஒன்று சர்ரென்று உதித்தது. நான் அவரிடம் சொன்னேன் " நீங்களும் என்னை ஓரளவுக்கு அறிவீர்கள். நான் என்ன சொல்கிறேனோ அதன்படி வாழ்கிறேன். என்னுடைய எழுத்துக்களை மற்றவர்கள் பின்பற்றவேண்டும் என்ற எண்ணத்தைவிட நான் பின்பற்றவேண்டும் என்ற எண்ணம் உள்ளவன் நான். நானும் என்னுடைய ஹைதராபாத் வீட்டை வாடகைக்குத்தான் விட்டு வந்திருக்கிறேன். ஆனால் நான் இரண்டாவது வருடம் வாடகையை கூட்டப்போவதில்லை. இரண்டு வருடங்கள் கழித்து கூட்டிக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன் " என்றேன். அதற்கு அவர் "அப்படியா, சார். உங்களுக்கு எந்தவித உதவி தேவைப்படினும் எனக்கு தெரிவித்தால் நான் முடிந்தவரை உதவுவேன்" என்றார். எங்கள் அலைபேசி உரையாடலும் முடிந்தது.

இது நடந்து சிலமணி நேரங்களில் என் மனக்கண் முன் மேற்கூறிய அலைபேசி உரையாடல் தோன்றியது. நாங்கள் இருவரும் மிகவும் நட்பான முறையிலே உரையாடினோம். ஆயினும் என்மீது ஏதோ ஒரு தவறு என்று எனக்கு பட்டது. அலசிப்பார்த்தேன். ஆம், அது வேறு எதுவும் இல்லை , நான் கடைசியில் அவரிடத்தில் 'நான் என்னுடைய ஹைதராபாத் வீட்டின் வாடகையை உயர்த்தவில்லை' என்கிற வார்த்தைதான். இதை நான் ஏன் அவரிடம் கூறினேன் என்பதை அலசிப்பார்த்தேன். என் வீட்டுஉரிமையாளர் முன்பு என்னை எப்படி நானே தாழ்த்திக்கொண்டேன் என்பதை உணர்தேன்.

அவர் கூறிய வாடகை உயர்வை ஒன்றுமே சொல்லாமல் ஒப்புக்கொண்டபின் நான் அவருடன் என்னை ஒப்பிட்டு “உங்களைப்போல நான் என் வீட்டு வாடகையை உயர்த்தவில்லை" என்று சொல்லாமல் சொன்னது என்னுடைய முதிர்ச்சியின்மையைத்தான் பிரதிபலித்தது. என் உணர்ச்சிவசத்தின் தத்தளிப்பு என் நாவின் பேதலிப்பு இவைதான் என்னுடைய இந்த சுட்டிகாட்டலில் மேலோங்கியிருந்தது.

பிறருக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அறிவுரையும் உபதேசமும் கூறும் நான் அந்த ஒரு கணத்தில் எப்படி மிகவும் சாதாரண தாழ்ந்த மனிதனாக மாறினேன் என்பதை நினைத்து வேதனை அடைந்தேன்.

அன்று இரவே என் வீட்டின் உரிமையாளருக்கு வாட்ஸாப்பில் ' இன்று காலை நான் அவ்வாறு பேசியதற்கு மிகவும் வெட்கப்படுகிறேன். நீங்கள் மிகவும் பண்பாட்டுடன் உரையாடினீர்கள். நான்தான் தேவையின்றி "நான் வாடகையை ஏற்றவில்லை" என்று சொல்லி என்முகத்தில் கரியைப் பூசிக்கொண்டேன். இவ்வாறு பேசியதற்காக என்னை மன்னித்துவிடுங்கள்" என்று செய்தி கொடுத்தேன்.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (31-Mar-23, 5:16 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 41

மேலே