நோக்கி முகனறிவார் முன்னம் அறிப அதுவே மகனறிவு தந்தை யறிவு - பழமொழி நானூறு 301

நேரிசை வெண்பா

நோக்கி அறிகல்லாத் தம்உறுப்புக் கண்ணாடி
நோக்கி அறிப அதுவேபோல் - நோக்கி
முகனறிவார் முன்னம் அறிப அதுவே
மகனறிவு தந்தை யறிவு. 301

- பழமொழி நானூறு

பொருளுரை:

தம் கண்ணால் நோக்கி அறியமுடியாத தமது உறுப்பாகிய முகத்தைக் கண்ணாடியில் பார்த்துத் தெரிந்துகொள்வர், அதேபோல், நோக்கி ஒருவன் முகத்தை அறிகின்றவர்கள் காணமுடியாத அவனது உட்கருத்தை அறிவார்கள், உள்ளத்தின் கருத்தை அவர் முகம் நோக்கி அறிதல் தந்தையினது அறிவை அவன் மகனது அறிவு நோக்கி அறிதல் போலும்.

கருத்து:

முகத்தால் உள்ளக் கருத்து அறியப்படும்.

விளக்கம்:

மகனது அறிவு தந்தையினது அறிவை ஒத்திருத்தல்போல, அகத்தினது கருத்தே முகத்தினும் அறியப்படும்.

'மகனறிவு தந்தை யறிவு' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Mar-23, 4:05 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

சிறந்த கட்டுரைகள்

மேலே